வெள்ளை மாளிகை வரலாற்றில் பணிபுரியும் முதல் திருநங்கை
அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ மாளிகையான வெள்ளை மாளிகையின் இத்தனை வருட வரலாற்றில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் அதிகாரியாக பதவியேற்கவுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பரிந்துரையால் அவர் நியமனம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் மாளிகையின் பணியாளர் தேர்வு இயக்குநராக ரஃபி பிரீட்மேன்-குர்ஸ்பேன் என்ற திருநங்கை நேற்று நியமனம் செய்யப்பட்டார். அமெரிக்க அதிபர் மாளிகையில், அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் திருங்கை இவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருநங்கைகளின் சமத்துவத்துக்கான தேசிய மைய ஆலோசராக பணியாற்றிய ரஃபி அவர்களை ஒபாமாவே இந்த பதவிக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
இவரது நியமனம் குறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் வலேரி ஜாரெட் அவர்கள் கூறியபோது, “திருநங்கைகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக ரஃபி பிரீட்மேன்-குர்ஸ்பேன் உறுதி பூண்டிருப்பதற்கு, ஒபாமா அரசு மதிப்பளிக்கிறது என்பதை இந்த நியமனம் பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், ரஃபி பிரீட்மேன்-குர்ஸ்பேனின் நியமனம், மூன்றாம் பாலின சமூகத்திற்கு ஒரு முக்கிய நிகழ்வு என்றும், அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றுகிறது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இது உள்ளது என்றும் வழக்கறிஞர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.