சியாச் சிகர பனிச்சரிவு. 6 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட இந்திய ராணுவ வீரர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள வடக்கு சியாச்சின் சிகரத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ராணுவ அதிகாரி உள்பட 10 வீரர்கள் பனியில் புதைந்து உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர்களின் உடல்களை தேடும்பணியில் இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படையும் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தது
இந்நிலையில் பனிச்சரிவு நிகழ்ந்த ஒரு இடத்தில் மீட்பு குழுவினர் பனிக்கட்டிகளை தோண்டி எடுத்து கொண்டிருந்தபோது, அங்கே ஒரு ராணுவ வீரரின் உடல் கிடைத்துள்ளது. இதுவரை 5 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணியில் இருந்த வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி யாக ஒரு ராணுவ வீரர் 25 அடி பனிக்கு அடியில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததை பார்த்தனர்
உடனடியாக அவரை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்ட மீட்பு படையினர் அவரை பத்திரமாக மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அந்த வீரர், கர்நாடாகவை சேர்ந்த ஹானமான்தப்பா என்றும், தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பனிச்சரிவு நடந்து ஆறு நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட ராணுவ வீரரின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் இதுவரை மீட்கப்பட்டுள்ள உடல்களில் 4 பேரின் அடையாளம் தெரிந்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.