உண்மையில் இதில் இருந்து வரும் புகையால் மனிதனுக்கு எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. போகிப் பண்டிகையில் நாம் பயன்படுத்திய பல பொருட்களை போட்டு எரிக்கிறோம். இதில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருட்களை எரிக்கும் போது அதில் இருந்து வரும் புகை நமக்குப் பகையாகிறது. தற்போது செயற்கை பொருள்களான டயர், பிளாஸ்டிக் போன்ற பொருள்களை எரிப்பதால் நச்சுப் புகைகளான கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, கந்தக ஆக்ஸைடு, டையாக்சின், ப்யூரான், நச்சுத் துகள்கள் காற்றில் கலப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
மேலும், கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவற்றில் எரிச்சல் உண்டாவதோடு, ஆஸ்துமா, மூச்சுத் திணறல் ஆகிய உடல் நலக்கேடுகள் ஏற்பட்டு, கண் பார்வை பாதிக்கப்படும். இதுபோன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். தினந்தோறும் வாகனங்களை இயக்கி நாம் ஏற்படுத்தும் புகைகளால் ஏற்கனவே மாசடைந்துள்ள நமது சுற்றுச்சூழல், இந்த போகிப் பண்டிகையின் போது கூடுதலாக மாசடைகிறது.
மேலும், புகைமூட்டத்தால் சாலைகள் கண்ணுக்கு தெரியாமல் போகின்றன. இதுபோன்ற சுகாதார சீர்கேடுகளை தடுக்க, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது. காற்று மாசடைவதை தடுக்க நாளை சுற்றுச்சூழலை பாதிக்காமல் புகையில்லா போகியை கொண்டாட வேண்டும். இதனால் என்ன ஆகிவிடப் போகிறது என்று எண்ணாதீர்கள். அன்றைய தினம், ஆஸ்துமா நோயாளிகளுக்கும், வயதானவர்களுக்கும், சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும் எவ்வளவு பிரச்னைகள் ஏற்படும் என்று எண்ணிப் பாருங்கள்.
மேலும், நீங்கள் பயன்படுத்தி நல்ல நிலையில் உள்ள பொருட்களை போகியில் போட்டு எரிக்காமல் அதனை தேவைப்படும் ஏழை, எளிய மக்களுக்குக் கொடுத்து உதவலாம். இது இன்னும் சிறந்த பண்டிகையாக அமையும். எனவே, போகிப் பண்டிகையை புகையில்லாப் பண்டிகையாகக் கொண்டாடுவோம்.