இப்போதெல்லாம் கேம்பஸ் இன்டர்வியூக்கள் மூலம் எப்படியாவது பெரிய, பெரிய கம்பெனிகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுவிடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள். ஆனால், அதற்காக அவர்கள் எவ்வளது தூரம் தெளிவாகத் திட்டமிடுகிறார்கள் என்றால் அது சந்தேகம்தான்!
கேம்பஸ் இன்டர்வியூக்களில் வெற்றிபெற மாணவர்கள் என்னென்ன செய்யவேண்டும், எவற்றையெல்லாம் மனதில் கொள்ளவேண்டும் என்பது குறித்து நம்மிடம் விளக்கினார் அண்ணா பல்கலைக்கழகத்தின் ‘சென்டர் ஃபார் யூனிவர்சிட்டி இண்டஸ்ட்ரி கொலாபரேஷன்’ ( CUIC ) இயக்குநர் மன்னார் ஜவஹர்
முதலில் செய்யவேண்டியது என்ன?
‘‘கல்லூரியில் சேரும்போதே எந்தக் கல்லூரியில் கேம்பஸ் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன, எந்தக் கல்லூரியைத் தேடி பெரிய பெரிய நிறுவனங்கள் வருகின்றன என்பன போன்ற விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். அத்தகைய கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பதுதான் நல்லது. அதிலேயே நமக்குப் பாதி வெற்றி கிடைத்த மாதிரிதான்.’’
‘‘எப்போது தயாராக வேண்டும்?’’
‘‘பொதுவாக கேம்பஸ் இன்டர்வியூக்கள் கல்லூரிப் படிப்பின் மூன்றாம் ஆண்டு இறுதியில்தான் நடை பெறும். இதனால், மூன்றாம் ஆண்டு துவக்கத்திலிருந்தே தயாராக ஆரம்பிப்பதுதான் நல்லது. இதனால் கடைசி நேர டென்ஷன்கள் எதுவும் இல்லாமல், தைரியத்துட னும் தன்னம்பிக்கையுடனும் தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்.’’
‘‘அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது..?’’
‘‘எந்த மாதிரி நிறுவனமாக இருந்தாலும் பிற துறையிலிருந்து வேலைக்கு வருபவர்களுக்கு சாஃப்ட்வேர் தொழில்நுட்பங்கள் குறித்த அடிப்படை யாவது தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதனால், C, சி++, ஜாவா போன்ற புரோகிராமிங் மொழிகளைத் தெளிவாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.’’
‘‘வேறென்ன தகுதிகள் வேண்டும்..?’’
‘‘மூன்று முக்கியமான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். முதலில் ஆட்டிடியூட்… தன்னம்பிக்கை, தைரியம், முடிவெடுக்கும் தன்மை போன்ற விஷயங்களை வெளிப்படுத்தும் தன்மை. அடுத்ததாக நாலெட்ஜ்… கல்வியறிவு. பாடத்திட்டத்தில் இருந்தும் அனுபவ ரீதியாகவும் கற்றுக்கொள்ளும் விஷயங்களை வெளிப்படுத்தும் திறமை. மூன்றாவதுதான் மிக முக்கியமான விஷயம். ஸ்கில்! பிறரோடு பழகத் தேவையான கம்யூனிகேஷன், குழுவினருடன் இணைந்து செயல்படும் தன்மை, தலைமைப் பண்பு, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம், கற்பனை வளம், படைப்புத் திறன் என இன்றைய கார்ப்பரேட் உலகத்துக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் இதில் அடக்கம்! இந்த முக்கியமான தகுதிகளை வளர்த்துக்கொள்வது கேம்பஸ் தேர்வுக்கு மட்டுமல்ல… வாழ்க்கைக்கே மிகவும் அவசியமானது.’’
‘‘கேம்பஸ் இன்டர்வியூவை நடத்தும் நிறுவனங்களைப் பற்றி…’’
‘‘மல்ட்டி நேஷனல் நிறுவனங்கள்தான் பெரும்பாலும் கேம்பஸ் இன்டர்வியூவை நடத்துகின்றன. எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில் (இதை ‘கோர்’ (Core) கம்பெனி என்கிறார்கள்) போன்ற துறைகளை உள்ளடக்கிய பொருள் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ‘ஐ.டி.’ நிறுவனங்கள் என்று நிறுவனங்களை இரண்டாகப் பிரிக்கலாம்.
ஐ.டி.ஐ., டிப்ளமோ, இன்ஜினீயரிங் என்று படித்தவர்களுக்கு, ‘கோர்’ நிறுவனங்களில் வேலை கிடைக்கும். ஆனால், இன் ஜினீயர்களுக்கு வாய்ப்புகள் குறைவு. அதுவே, ‘ஐ.டி.’ கம்பெனிகள் என்று வரும்போது, ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.
டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ், காக்னிசன்ட், விப்ரோ, இன்ஃபோசிஸ், சத்யம் போன்ற பல்க் ரெக்ரூட்டராக சில இந்திய நிறுவனங்கள் இருக்கின்றன. கடந்த ஆண்டு டி.சி.எஸ். நிறுவனம் சுமார் 23,000 பேருக்கு வேலை வாய்ப்பைக் கொடுத்திருக் கிறது. இந்த ஆண்டு சுமார் 35,000 பேரைத் தேர்வு செய்யத் திட்டமிட்டிருக்கிறது. இன்னொரு பக்கம், சம்பளத்தை வாரிவழங் கும் மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், ஐ.பி.எம்., கூகுள், யாகூ போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் இருக்கின்றன. மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தால் ஆண்டுச் சம்பளம் சுமார் 9.6 லட்சம்!’’
‘‘கோர் சப்ஜெக்ட் படித்தவர்களுக்கு ஐ.டி. கம்பெனிகளில் வேலைவாய்ப்பு கிடைக்குமா?’’
‘‘நிச்சயமாகக் கிடைக்கும். எந்த சப்ஜெக்ட் படிக்கிறோம் என்பதை விட, புரோகிராமிங் அறிவு அதிகமுள்ளவர்களையே ஐ.டி. கம்பெனிகள் வேலைக்கு எடுக்கின்றன. காரணம் கோர் சப்ஜெக்ட் படித்தவர்களுக்கு புரோகிராமிங்கும் தெரியும்பட்சத்தில், தங்கள் துறைகளில் வரும் டிஸைனிங் போன்ற விஷயங்களில் அதிக திறனைக் காட்டமுடியும். எனவே, அதைப் படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. ஐ.டி. கம்பெனிகளில் சென்ற ஆண்டு வேலைவாய்ப்பைப் பெற்றவர்களில் 45% கோர் சப்ஜெக்ட் படித்தவர்கள்தான்.’’
‘‘மாணவர்களுக்குச் சாதாரண இன்டர்வியூவைவிட கேம்பஸ் இன்டர்வியூ எந்த வகையில் நன்மையளிப்பதாக இருக்கும்?’’
‘‘கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும் கம்பெனிகள், மாணவர்களின் மனநிலையை உணர்ந்து அதற்கு ஏற்பத்தான் கேள்வி கேட்கின்றன. மாணவர்கள் ஏதாவது சிறு தவறுகள் செய்துவிட்டாலும், அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். பல்க் ரெக்ரூட்டர்களின் டெக்னிக்கல் கேள்விகளும் ஓரளவுக்கு பதில் அளிக்கக் கூடியவையாகவே இருக்கும். அடுத்தடுத்து கம்பெனிகள் வந்துகொண்டே இருப்பதால் ஒன்றில் சரியாகச் சொல்ல முடியாவிட்டாலும் அடுத்த இன்டர்வியூவில் சிறப்பாகச் செய்யலாம் என்ற நம்பிக்கையோடு இருக்கமுடியும்.
இதுவே நிறுவனம் தன் இடத்தில் நடத்தும் இன்டவியூவில் இந்தச் சலுகைகள் எதுவுமே இருக்காது. அங்கே திறமைசாலிகளுக்குத்தான் முன்னுரிமை!’’