ஐம்புலன்களையும் அடக்குவது சரியா?

603995_251100708410001_319346824_n
தியானம் என்பது நம்முள் உள்ள ஆன்மாவை காண்பது என்ற உன்னத நிலையை அடைய விரும்பும் சாதனம் மட்டுமல்ல, மன அமைதி, புத்தி கூர்மை, சமயோஜிதம், அறிவில் தெளிவு, ஞானம் இவை எல்லாவற்றிற்கும் மேலாக பல அற்புத ஆற்றல்களையும் தரவல்லது. பக்தி உருகுவது என்றால், தியானம் என்பது உறுதி பெறுவதாகும். பக்தி இறைவன் மேல் பற்றினை வளர்த்து இறுதியில் சூன்யத்தை(வெட்ட வெளியை) அடைவதாகும். தியானத்தில் பற்றுகளை அறுத்து தவத்தில் நிலைத்து வெட்ட வெளியை அடைவதாகும். பக்தியில் மனதின் செயல்பாடுகளே முக்கியத்துவம் பெறுகின்றன. தியானத்திலோ, கர்ம இந்திரியங்கள், ஞான இந்திரியங்கள், அந்த கரணங்கள், புலன்கள் என்று அனைத்தும் சீரமைக்கப்படுகின்றன. எனவேதான் விரைவாக மேல் நிலையை அடைய முடிகிறது. அதாவது புனிதப்படுத்துவது.

பொதுவாக புலன்களை அடக்குவது என்பார்கள். ஆனால், உண்மையில் அடக்குவது என்பது தவறான பதமாகும். ஒடுக்குவது என்று சொல்வதே சரியாகும். திருமூலர் ஐம்புலன்களை அடக்கு என்பவர்களை இவ்வாறு விமர்சிக்கிறார்.
அஞ்சும் அடக்குஅடக் கென்பர் அறிவிலார்,
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே – திருமந்திரம் – 2033
ஐம்புலன்களை அடக்கு அடக்கு என்பவர்கள் அறிவில்லாதவர்கள் என்கிறார்.
ஐம்புலன்களை அடக்கியவர்கள் தேவலோகத்திலும் இல்லை என்கிறார்.
ஐம்புலன்களை அடக்கினால் மதிகெட்டுபோய்விடும் என்கிறார்.
அவற்றை அடக்காது அவற்றை நெறிப்படுத்தும் அறிவை நான் அறிந்தேன் என்கிறார்.

அடக்குவதற்கும் புனிதப்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. குருட்டு நம்பிக்கையாலோ, பண்படாத உற்சாகத்தாலோ, கண்மூடித்தனமான வழக்கத்தாலோ பலவந்தமாக ஒன்றை வேண்டாம் என்று தள்ளுவது அடக்குவதாகும். அவ்வாறல்லாமல், காரணங்களைச் சரியாகப் புரிந்து கொண்டு, மனதிலுள்ள தவறான கருத்துக்களை அகற்றுவதன் மூலமாக செய்யப்படும் மறுப்பு புனிதப்படுத்துவதாகும். புலன்கள அடக்குவதால் மனிதன் சீரழிந்து போகிறான். புலன்களைப் புனிதப் படுத்துபவனே பெருவாழ்வு வாழ்வான்.

அதாவது ஒரு சாதகனின் கண்களுக்கு உலகம் துன்பங்கள் நிறைந்ததாகவே தோன்றும். ஏனென்றால் அவன்அறிவின் உச்சத்தில் நின்று உலகைக் கவனிக்கிறான். சக்தி மிகுந்த விவேகமான புத்தியின் பிரகாசத்தைக் கொண்டு காணும் போது நம்மை, நம் அறிவை மயக்குகிற இந்த உலகாய விஷயங்களெல்லாம் பொய்யானவை என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்கிறான். எனவே ஞான வீதியில் நடப்பவனுக்கு உடலை ஒடுக்கவும், புறக்கணிக்கவும், அதனின்று விலகி நிற்கவும் நிறைய சக்தி இருக்கிறது. மனதோடும், புத்தியோடும் முழுவதுமாக தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளவும் அவனால் முடிகிறது.. இதையே ஒடுக்கம் என்கிறோம். இதுவே புனிதப் படுத்திக் கொள்வது. அதாவது புலன்கள் மீதான மனதின் பழைய எண்ணங்களை நீக்குவது, புதிய எண்ணங்களை சீரமைப்பது இதுவே புலனடக்கம் எனப்படுகிறது.

Leave a Reply