சுற்றுலா என்றாலே எல்லாருக்கும் குதூகலம்தான். ஆண்டுமுழுக்க வேலை பார்த்துவிட்டு, குடும்பத்தோடு சுற்றுலா செல்வதற்கு யாருக்குத்தான் பிடிக்காது? தவிர, ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுலா செல்வதற்காகத் திட்டுமிட்டுப் பணம் சேர்த்து வருகிறார்கள் பலர். தற்போது சிறப்பாகச் செயல்பட்டுவரும் இந்தத் துறை நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சக்கணக்கான புதிய தொழில்வாய்ப்புகளை அளித்து வருகிறது. அந்த தொழில்வாய்ப்புகள் என்னென்ன என்பது பற்றி விளக்கமாகச் சொல்கிறார் ரவி டிராவல்ஸ் அண்ட் டூரிஸம் நிறுவனத்தின் மேனேஜர் கிருஷ்ணன்.
போக்குவரத்து!
”சுற்றுலாத் துறைக்கு அடிப்படைத் தேவை போக்குவரத்து வசதிதான். ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல முதல் தேவையே போக்குவரத்துதான். இந்தப் போக்குவரத்துக்காகப் பயன்படும் கார்கள், பேருந்துகள், சிற்றுந்துகள், ரயில், விமானம் என மக்களின் தேவைக்கு ஏற்பாடு செய்து தருவதற்கெனச் சில டிராவல் ஏஜென்சிகள் உள்ளன. இவற்றின் வேலையே சுற்றுலா செல்லும் மக்களின் தேவைக் கேற்ப போக்குவரத்துக்காக பேருந்துகளோ, கார்களோ அல்லது சிற்றுந்துகளையோ ஏற்பாடு செய்து தருவதுதான். இதற்காகச் சொந்தமாகப் பல்வேறு பேருந்துகளும், கார் வகைகளும் வைத்திருக்கும் தனிப்பட்ட நபர்கூட இந்தத் தொழிலில் ஈடுபடலாம். இதற்கெனத் தனியார் ஏஜென்ட்களும் உண்டு. இந்த ஏஜென்ட்களிடம் நமக்குத் தேவையானதைக் கூறிவிட்டால் அதற்கேற்றாற்போல் வாகனங் களை வாடகைக்கு ஏற்பாடு செய்து தருவார்கள். இதற்கென நல்ல பேச்சுத்திறனும், வேகமாகச் செயல்படக்கூடிய திறனும் இருந்தால் போதும். இதன்மூலம் மாதம் ரூ.50,000 வரை சம்பாதிக்கலாம்.
டிராவல்ஸ் அண்ட் டூரிஸம் ஏஜென்சீஸ்!
சில ஏஜென்சிகள் அனைத்துவிதமான டிராவல் உரிமையாளர்களிடமும் தொடர்பில் இருப்பார்கள். யாருக்கு எந்த டிராவல்ஸில் டிக்கெட் தேவையோ, அதை புக் செய்துதருவார்கள். இதற்கென கமிஷன் அடிப்படையில் பல ஏஜென்ட்கள் உள்ளனர். இவர்கள் ரயில் டிக்கெட், விமான டிக்கெட்களைப் பதிவுசெய்து தருவார்கள். இதோடு சுற்றுலா செல்வோருக்குத் தேவையான ஹோட்டல்களையும், சுற்றுலா மையங்களைச் சுற்றிகாண்பிக்க சுற்றுலா ஆலோசகர் ஒருவரையும் ஏற்பாடு செய்து தருவார்கள்.
இந்த ஏஜென்சிகளை முறையாக ஆரம்பிக்க இந்திய சுற்றுலாத் துறையிடம் பதிவுசெய்ய வேண்டும். மேலும், சர்வதேச அளவில் சுற்றுலா அழைத்துச் செல்வதற்காக இந்தியன் அசோசியேஷன் ஆஃப் டூர் ஆபரேட்டர்ஸில் பதிவுசெய்ய வேண்டும்.
இந்தத் தொழிலில் ஆரம்ப காலகட்டத்தில் லாபம் என்பது மிகக் குறைவே. ஆனால், இரண்டாவது வருட ஆரம்பத்தில் லாபம் இருக்கும். சுமார் 30-35% வரை லாபம் கிடைக்கலாம். இந்தத் தொழிலுக்கு முதலீடாகக் குறைந்தபட்சம் ரூ.5 லட்சமாவது முதலீடு செய்யவேண்டும். இந்தத் தொழிலை பொறுத்தவரை, வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்தினாலே போதும். வாடிக்கையாளரே இன்னொரு வாடிக்கையாளரை அறிமுகப்படுத்துவார்.
டூரிஸ்ட் விசா- பாஸ்போர்ட்!
சிலருக்கு வெளிநாடு சுற்றுலா செல்வதில் அலாதி பிரியம். ஆனால், அவர்களிடம் பாஸ்போர்ட், விசா இருக்காது. இந்த டூரிஸ்ட் பாஸ்போர்ட், விசாக்களை இந்த ஏஜென்சிகள் வாங்கித் தருவார்கள். இதற்கான கமிஷனை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். இந்த விசாவுக்கு ஒவ்வொரு நாட்டுக்கு ஏற்றாற்போல கட்டணங்கள் இருக்கும். இதற்கு சர்வீஸ் சார்ஜாக ரூ.300 வாங்கப்படும்.
இதில் பாஸ்போர்ட் இல்லாத வர்களுக்கும் பாஸ்போர்ட்டும் வாங்கித் தருவோம். இதற்கும் தனிப்பட்ட சர்வீஸ் கட்டணங் கள் உண்டு. இதில் முதலீடு என்பது பெரிய அளவில் இல்லை. அதேசமயம், லாபம் மாதம் ரூ.5,000 – 10,000 வரை இருக்கும்.
டூரிஸ்ட் கைடு!
ஒரு சுற்றுலா குழுவை சரியாக வழிநடத்திச் செல்வதுதான் டூரிஸ்ட் கைடின் வேலை. டூரிஸ்ட் கைடாகச் செயல்பட இரண்டு மாத தனிப்பயிற்சியே உண்டு. இந்தப் பயிற்சியில் சிற்பக்கலைகள், ஆலயங்கள், நடனம், இசை போன்ற முக்கியச் சுற்றுலாத்தலங்களை விளக்கிச் சொல்வதோடு, டூரிஸ்ட் ஸ்பாட்களுக்கும் அழைத்துச் சென்று களப்பயிற்சி தருவார்கள்.
இந்தப் பயிற்சிவகுப்பு முடிந்தவுடன் தரப்படும் சான்றிதழ்களை இந்திய சுற்றுலாத் துறையிடம் பதிவு செய்யவேண்டும். இதன்பின் எந்த ஒரு மாநிலத்திலும் கைடாகச் செயல்பட முடியும். இந்தச் சுற்றுலா கைடுகளின் பட்டியலை அரசாங்கமானது சில தனியார் நிறுவனங்களிடமும் தரும். இதன்மூலம் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்தத் தொழிலை மிகச் சிறப்பாகச் செய்ய ஆங்கில மொழியை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில், சுற்றுலாக் குழுவினருக்கு உங்கள் அணுகுமுறை பிடித்துவிட்டால், அவர்களே உங்களை இரண்டாவது முறையாகவும் அழைக்க வாய்ப்புண்டு.
சப்-ஏஜென்டாகவும் செயல்படலாம்!
சில பெரிய சுற்றுலா நிறுவனங்களுக்கு எல்லா ஊர்களிலும் கிளை நிறுவனங்கள் இருக்காது. இத்தகைய நிறுவனங்கள் பல ஊர்களில் சப்-ஏஜென்ட்களை நியமிக்கும்.
பெரிய சுற்றுலா நிறுவனங் களிடம் சப்-ஏஜென்ட்களாகப் பதிவு செய்துகொண்டு, அவர்கள் தரும் வேலையை முடித்துத் தரலாம். இதன்மூலம் மாதம் ரூ.50,000 வரை சம்பாதிக்கலாம். இவர்களின் முக்கிய வேலையே கம்யூனிகேஷன்தான்.
மணி எக்ஸ்சேஞ்ச்!
வெளிநாட்டு சுற்றுலாவுக்குத் தேவையான கரன்சிகளைச் சுற்றுலா செல்பவர்கள் இங்கிருந்தே எடுத்துசெல்ல முடியும். இதற்கென மணி எக்ஸ்சேஞ்ச் மையங்கள் உள்ளன. இந்த மணி எக்ஸ்சேஞ்ச்கள் மூலம் சுற்றுலா செல்பவர்கள் எந்த நாட்டுக்கு செல்கிறார்களோ, அந்த நாட்டு கரன்சிகளாக மாற்றிக்கொள்ள முடியும்.
இதற்கென கமிஷன் தொகையும் வாடிக்கையாளர்கள் செலுத்தவேண்டி இருக்கும். இதற்குக் கட்டணமாக 0.5 சதவிகிதம் வரை வசூலிக்கப்படும்.
நினைவுப் பொருள் விற்பனையகங்கள்!
சுற்றுலா செல்பவர்கள் அங்குப் பிரபலமாக விற்கப்படும் பொருட்களை வாங்குவது வழக்கம். உதாரணத்துக்கு, மைசூர் என்றாலே சந்தனம், பழங்கால நாணயங்களை வாங்குவார்கள். ஊட்டி என்றால் வாசனை மிக்க யூகலிப்டஸ் தைலங்களை வாங்க விரும்புவார்கள். இந்தப் பொருட்களை வாங்கிவைத்து விற்பதன்மூலம் கைநிறைய சம்பாதிக்க முடியும்.
பாரம்பரிய உணவகங்கள்!
சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் இடையே பாரம்பரிய உணவுகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, ருசியாக, தரமாகப் பாரம்பரிய உணவுகளைத் தயார் செய்துதந்தால், நல்ல வரவேற்பு கிடைக்கும்” எனச் சுற்றுலாத் துறையில் இருக்கும் எல்லா தொழில்வாய்ப்புகள் குறித்தும் விலாவாரியாக எடுத்துச் சொன்னார் கிருஷ்ணன்.
துடிப்பான இளம்வயதினர் இந்த வாய்ப்புகளைத் துணிச்சலோடு ஏற்கலாமே!