குழந்தைகளின் வாழ்க்கை சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றத்தால் பார்வை குறைபாடு அதிகரித்து வருகிறது. இதை புரிந்து கொள்ள பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு போதுமான விழிப்புணர்வு இருப்பதில்லை என கண் மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனா். முதியோர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த பார்வை குறைபாடு, தற்போது அதிகளவில் இளைஞர்களை பாதித்து வருகிறது. 100 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் தற்போது 5 கோடி பேருக்கு பார்வை குறைபாடு உள்ளது.
இதில் 3.20 லட்சம் பேர் குழந்தைகள். பார்வையிழப்பிற்க்கான மூல காரணங்களில் 66% குணப்படுத்தக்கூடிய அல்லது தடுக்கக் கூடிய காரணங்களால் பார்வையிழந்தவர்கள். ஒவ்வொரு நாளும் கண் சார்ந்த விபத்துகள், தொற்று நோய்க் கிருமிகள், ஊட்டச் சத்துக்குறைவு, பிறவியிலேயோ, பரம்பரையாகவோ அல்லது முறையற்ற கண் பராமரிப்பு, வேறு ஏதாவது நோய்க் கிருமிகள் போன்ற பல்வேறு காரணங்களால் பார்வையிழப்பு என்னும் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளும் ஏராளம்.
தங்களுக்கு கண்ணில் குறைபாடு இருக்கிறது என்பதை அவர்களாகவே புரிந்து கொள்ள முடியாது. கண்ணில் குறைபாடு உள்ள குழந்தைகள் அந்தக் குறைகளுடனேயே தமது வேலைகளை, குறிப்பாக படிப்பது, விளையாடுவது, போன்ற வேலைகளை ‘இது தான் இயல்பான பார்வை’என்ற எண்ணத்துடன் செய்கின்றனர். தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க மிகவும் சிரமடைவார்கள் தான் அதிகம்.
இது கிட்டப்பார்வை என்று சொல்லக் கூடிய மையோப்பியா பார்வை குறைபாடு. இதனால் மாணவர்களுக்கு கவன குலைவு, கவன சிதைவு போன்றவை ஏற்பட்டு படிப்பில் நாட்டமில்லாமலும், ஆா்வமில்லாமலும் போகிறது. இதனை தடுக்க மாணவர்களின் பார்வை எல்லையை விரி வடையச் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனா். இது குறித்து கண் மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: பார்வை குறை பாடால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
இந்தியா, சிங்கப்பூா், சீனா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் அதிகப்படியான பள்ளி குழந்தைகள் பார்வை குறைபாட்டிற்கு ஆளாகியுள்ளனா். இதற்கு காரணம் குழந்தைகளின் மரபணுக்கள் மற்றும் அன்றாட பழக்க வழக்கங்கள் தான். தற்போது குழந்தைகளின் வாழ்க்கை சூழல் மாறியுள்ளதே இதற்கு பிரதான காரணம். இயல்பாகவே மனிதனின் பழக்க வழக்கத்திற்கு ஏற்றவாறு உடல் உறுப்புகள் மாறி விடும் தன்மை கொண்டவை. குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் பார்வையை செலுத்துவதால் , குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இந்தியாவில் உள்ள 20 சதவீத பள்ளி குழந்தைகள் இந்த பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
குழந்தைகளுக்கு பொதுவாக பார்வைத் திறன் குறைபாடு, மாறுகண், சோம்பல் விழிகள், குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைந்த விழித்திரை நோய், மற்றும் விழித்திரை புற்று நோய் போன்ற பிரச்சினைகள் அதிகமாக பாதிக்கின்றன. இது போன்ற குறைபாடுகளுக்கு ஆளாகாமல் இருக்க , அவா்களாகவே ஒரு சில செயல்பாடுகளை செய்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம். ஒரு மணி நேரம் கம்யூட்டரில் வேலை செய்பவர்கள், அவற்றில் இருந்து வெளியே வந்து, குறைந்தது 10 நிமிடங்களுக்கு தொலைவில் உள்ள மரங்கள், மலைகள் மீது தங்களது பார்வையை செலுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கின்றனா். பள்ளிக்கு செல்லும் முன் பரிசோதனை: குழந்தை பிறந்தவுடனும் ,1 ,3 மற்றும் 5 ஆகிய வயதிலும் கட்டாயம் கண் பரிசோதனை செய்யவேண்டும். 6 வயதுக்குள் கண்டு பிடிக்கப்படும் பார்வை குறைபாட்டை நிரந்தரமாக குணப்படுத்த முடியும். இன்றைய குழந்தைகள் வீடியோ கேம், செல்போன், டிவி ஆகியவற்றில் நாட்டம் கொண்டு நேரத்தை செலவிடுகின்றனா்.
இவற்றை தவிர்த்து வெளி விளையாட்டுகளிலும் பங்கேற்க வேண்டும். வெளி விளையாட்டுகளில் அதிகம் நாட்டம் இல்லாதவர்கள் , குழு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தயக்கம் உள்ளவர்கள் போன்றவர்களிடமும் இந்த குறைபாடு இருக்கும். வகுப்பறைக்கு செல்லும் ஆசிரியர்களால் மட்டுமே இந்த தயக்கத்தை கண்டுபிடித்து தெளிவு படுத்த முடியும். இதே போல் வீடுகளில் ஒரு சில செயல்களை செய்யும் போதுபார்வைக் குறைபாட்டால் மாணவர்கள் அவதிப்படுவா்.
குழந்தைகளின் வழக்கமான செயல்பாடுகளிலிருந்து, பெற்றோர்களால் இவற்றை புரிந்து கொள்ள முடிவதில்லை. பொதுவாக தலை வலி ஏற்படுவதற்கு 250 க்கும் மேற்பட்ட காரணங்கள் உள்ளது. இவை மூளை மற்றும் மனம்சார்ந்த பிரச்னை என வகை படுத்தப்படுகிறது. இவற்றை தகுதி வாய்ந்த மருத்துவர்களிடம் பரி சோதித்து அதற்குண்டான சிகிச்சை பெற வேண்டும்.
பார்வைக்கு தேவை சத்துணவு:
ஜெராஃப்தால்மியா எனப்படும் குழந்தைகளின் கண்கள் உலர்ந்து போகச் செய்யும் பிரச்னைக்கும், மாலைக்கண் நோய்க்கும் முக்கியமான காரணம் வைட்டமின் ஏ சத்துக் குறைபாடுதான். பால், கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், பப்பாளி, முட்டை மற்றும் கேரட் போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது. பார்வை நரம்பின் செயல் பாட்டிற்க்கு காரணமாக இருப்பது வைட்டமின் பி.
அரிசி, கோதுமை, முளைகட்டிய தானியங்கள், பீன்ஸ் மற்றும் முட்டை போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது. கண்ணில் உள்ள ரத்தக்குழாய்களின் ஆரோக்கியத்திற்க்கு வைட்டமின் சி மிகவும் ஆரஞ்சு, நெல்லி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, கொய்யா, எலுமிச்சை மற்றும் தக்காளி போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது. இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு அதிகரிப்பு மாறி வரும் வாழ்க்கை சூழல்பாதிப்பை தடுக்க படிக்கும் அறைகளில் நல்ல வெளிச்சம் அவசியம். கண்கள் கூசும் அளவிற்கு வெளிச்சம் இருக்கக்கூடாது.
தொலைக்காட்சி பார்க்கும் பொழுதும், கம்ப்யூட்டரில் படிக்கும் பொழுதும், கம்ப்யூட்டரில் விளையாடும் பொழுதும் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கண்சோர்வு அடைவதைத் தவிர்க்கலாம். தினமும் சிறிதுநேரம் குழந்தைகள் வெளியில் சென்று விளையாட வேண்டும். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கூர்மையான குச்சி, பேனா போன்ற பொருட்களை வைத்துக்கொண்டு விளையாடவோ, ஓடவோ கூடாது. கண்ணாடி அணிந்திருக்கும் குழந்தைகள் பிளாஸ்டிக் லென்ஸ் அணிவது நல்லது.