திக்குவாய் என்பது குறையா? நிச்சயமாக குறை அல்ல. பேசும்போது திக்கித் திக்கிப் பேசுபவர்கள் மேடையேறி அருமையாகப் பாடுவதையும், பலகுரல்களில் பேசுவதையும் நாம் கேட்டிருக்கிறோமல்லவா. ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான மர்லின் மன்றோ, இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் போன்றோர் திக்குவாயை நேர்மறையாக எதிர்கொண்ட சாதனையாளர்கள். சரி திக்குவாய் ஏன் ஏற்படுகிறது? இதற்கு தீர்வு என்ன? என்பதனை அலசுவோம்… திக்குவாய் ஏற்படுவதற்கான உளவியல் ரீதியிலான காரணம் குறித்து விளக்குகிறார் மனநல மருத்துவர் கார்த்திக் எம்.சாமி.
‘‘சிந்திக்கிறவற்றை பேச்சின் மூலம் வெளிப்படுத்துவதில் ஏற்படும் தடுமாற்றமே திக்குவாய் ஆகும். புதிதாக கண்டுபிடிக்கப்படும் மன நோய்களை சேர்த்தும், நடைமுறையில் ஒழிந்து போன மன நோய்களை நீக்கியும் ஐசிடிஎச் புத்தகம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை வெளியாகும். அதன் மனநோய்களின் பட்டியலில் திக்குவாயும் இடம் பெற்றுள்ளது. திக்குவாய், ஆட்டிஸம் போன்ற உளவியல் ரீதியான சிக்கல்களுக்கு பெண்களை விட நான்கு மடங்கு அதிக அளவில் ஆண்களே பாதிக்கப்படுகின்றனர். திக்குவாய்க்கு வாய், நாக்கு, தொண்டையை விட மனமே முக்கியக் காரணம். மூளையில் க்ரே மேட்டர், வொயிட் மேட்டர் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. க்ரே மேட்டர் என்பது சிந்தனை உற்பத்தியாகிற இடம். வொயிட் மேட்டர் என்பது அதை மற்ற உறுப்புகளுக்கு கடத்திச் செல்வது. அந்த வொயிட் மேட்டரில் ஏற்படும் பாதிப்பே திக்குவாய்க்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. அதாவது சிந்திப்பதை அடுத்த தளத்துக்கு கடத்திச் செல்வதில் ஏற்படும் சிக்கல்.
இடது மூளையில் பேச்சு உற்பத்தியாகிற Temporal என்னும் பகுதியில் ஏற்படும் பிரச்னையின் காரணமாக திக்குவாய் ஏற்படலாம். உளவியல் சார்ந்த பிரச்னைகள் பொதுவாக மரபுவழியிலிருந்தும் வரும். அந்த அடிப்படையில் திக்குவாய்க்கு மரபணுக்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. குழந்தை நன்றாகப் பேசிப்பழகுகிற காலகட்டத்தில் அக்குழந்தையின் புறசூழல் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தும் திக்குவாய் ஏற்படலாம். பயம், பதற்றம் ஆகியவற்றுக்கு குழந்தை ஆளாகும்போது இப்பிரச்னை ஏற்படலாம். மகிழ்ச்சியான குடும்ப சூழல் இல்லாமல் போகுதல், வன்முறைக்கு உட்படுத்தப்படுதல் போன்றவையும் இதற்கு காரணங்களாக அமைகின்றன. பேசிப்பழகுகிற காலகட்டத்தில் வேறு யாரேனும் திக்கிப் பேசுவதைக் கேட்டு அதுபோலவே தானும் திக்கிப் பேசலாம். ஆனால் அது நாளடைவில் சரியாகி விடும். மூளை தொடர்பான வேறுவிதமான பாதிப்புகளால் கூட திக்குவாய் ஏற்படும். உதாரணத்துக்கு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் திக்கிப் பேசுவதைப் பார்த்திருப்போம்.
பேசும்போது திக்கிப் பேசுபவர்கள் பாடும்போது எவ்வித சிக்கலும் இல்லாமல் நன்றாகப் பாடுவார்கள். இது எப்படி என்கிறீர்களா? பேச்சு உற்பத்தியாகிற இடம் இடது மூளை. பாடல் மற்றும் கலைகளின் உற்பத்தி வலது மூளையில் இருப்பதால் இப்பிரச்னை வருவதில்லை. திக்குவாய் உள்ளவர்கள் தாழ்வு மனப்பான்மை, பதற்றத்தைக் களைய வேண்டும். நம்பிக்கையோடும், ஆத்மாத்மார்த்தமாகவும் செயல்படுகிறவர்கள் மேடையேறி பாடலாம், மிமிக்ரி செய்யலாம். திக்கவே திக்காது. திக்குவாய் இருப்பவர்கள் இதனை சரிசெய்ய முடியும் என்கிற நம்பிக்கையை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். உளவியல் ரீதியான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். பேச்சுப்பயிற்சிகள் இன்றைக்கு பரவலாக அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் மூலம் திக்குவாயை குணப்படுத்த முடியும்’’ என்கிறார்.
திக்குவாய்க்கு எவ்வாறு பேச்சுப்பயிற்சி அளிக்கப்படுகின்றன? விளக்குகிறார் பேச்சுப்பயிற்சி நிபுணர் சராவதி“திக்குவாயை நாம் பேச்சுக் குறைபாடு எனலாம். பேச்சில் சரளம் தடைபடும், வெளிப்படுத்தும் வார்த்தையின் வேகம் மற்றும் ஏற்ற இறக்கம் ஆகியவை முறையாக இருக்காது. திக்குவாய் உள்ளவர்கள் இரண்டு விதமாக வார்த்தைகளை உச்சரிப்பார்கள். முதலாவது வகை Repetition அதாவது ‘‘சு… சு… சுரேஷ்’’ என்று ஒரு வார்த்தையை திரும்ப திரும்ப உச்சரிப்பது. இரண்டாவது வகை prolongation அதாவது ‘‘சு……ரேஷ்…’’ என்று ஒரு வார்த்தையை நீளமாகச் சொல்வது. எல்லோருக்கும் எல்லா நேரத்திலும், எது பேசினாலும் திக்காது. சிலருக்கு குறிப்பிட்ட வார்த்தையோ எழுத்தோ மட்டும் திக்கலாம். சிலருக்கு தன்னை விட உயர்நிலையில் இருப்பவர்களிடம் பேசும்போது மட்டும் பயம் காரணமாக திக்கலாம்.
திக்குவாய் மூன்று வகைப்படும், Developmental எனும் பிறந்ததிலிருந்தே இருக்கும் திக்குவாய், Psychogenic எனும் வாலிபப்பருவத்தில் ஏற்படும் திக்குவாய், Nuerogenic எனும் மூளைபாதிப்பால் ஏற்படும் திக்குவாய் என அவற்றைப் பிரிக்கலாம். பரிசோதித்த பிறகே எப்படியான சிகிச்சை அளிப்பது எனும் முடிவுக்கு வரமுடியும். எந்த வயதினருக்கு திக்கு வாய் இருந்தாலும் பேச்சுப்பயிற்சி அவசியம். குழந்தைகளுக்கு இருக்கும் திக்குவாய், பயிற்சி மூலம் சரியாகலாம் அல்லது அப்படியே விட்டால் நாளடைவில் அதுவாகவே குணமாகவும் வாய்ப்பிருக்கிறது.
திக்குவாய்க்கு மருந்து கிடையாது. பேச்சுப் பயிற்சி மட்டும்தான் ஒரே தீர்வு. மனநலப் பிரச்னைகளால் திக்குவாய்க்கு ஆளானவர்களுக்கு மனஅழுத்தம், மனச்சோர்வைப் போக்குவதற்காக மனநல மருத்துவர்கள் மருந்து கொடுப்பார்கள். பேச்சுப்பயிற்சி என்பது ஒவ்வொரு வார்த்தைக்கும் சரியான உச்சரிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை உச்சரித்து பயிற்றுவிப்போம். பேசும்போது ஏற்படுகிற பயம், பதட்டம் ஆகியவற்றைக் குறைத்து பேச வைப்பது, வேகமாகப் பேசினால் வேகத்தைக் கட்டுப்படுத்தி சீரான வேகத்தில் பேச வைப்பது என பலவற்றை உள்ளடக்கியது. திக்குவாயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தையின் பெற்றோருக்கு குழந்தையிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், புறசூழல் எப்படி இருக்க வேண்டும், என்பது குறித்தெல்லாம் விளக்குவோம். பெற்றோர்கள் புரிந்து கொண்டு ஊக்கம் கொடுத்தல் மிக முக்கியமானது’’ என்கிறார் சராவதி.