சென்னை வெள்ளத்தினால் நாம் கற்று கொண்ட பாடம் என்ன?
சென்னையில் வரலாறு காணாத அளவில் மழை வெள்ளம் ஏற்பட்டு அதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த அளவு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட என்ன காரணம்? ஆளுங்கட்சி எதிர்க்கட்சியையும், எதிர்க்கட்சி ஆளுங்கட்சியையும் குற்றம் சுமத்தி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களின் துயர்நீங்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து தற்போது பார்ப்போம்
இந்த வெள்ளத்தின் பாதிப்பை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்றுதான் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும், ஒருசில ஊடகங்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. நிவாரண உதவி கிடைக்காத பகுதிகளுக்கு சென்று வேண்டுமென்றே அரசை குறைகூறுமாறு ஒருசில ஊடகங்கள் வற்புறுத்துவதாக தகவல் வெளிவந்துள்ளன. அதே நேரத்தில் ஓரளவு நிவாரண பணியை செய்துவிட்டு கிட்டத்தட்ட முழு இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டதாகவும் ஒருசில ஊடகங்கள் கதை கட்டி விடுகின்றன.
நிவாரணப் பொருட்களில் முதல்வர் படத்தை ஒட்டியபின்னர்தான் அனுமதிப்பதாக ஒரு தரப்பும், எதிர்க்கட்சி குண்டர்களுக்கு பணம் கொடுத்து முதல்வர் படத்தை மிஸ்யூஸ் செய்வதாக இன்னொரு தரப்பும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றனர். நிவாரண உதவிகள் முழுவீச்சில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக ஒரு தரப்பும், நிவாரண உதவிக்கு வந்த பொருட்கள் துறைமுகத்திலேயே வைக்கப்பட்டு கெட்டு போய்விட்டதாக இன்னொரு தரப்பும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இந்த இரண்டு தரப்புகளில் யார் கூறுவது உண்மை என்று அப்பாவி பொதுமக்களுக்கு தெரியவில்லை என்பதுதான் உண்மை.
சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு, மனை வாங்குவோர் இதற்கு முன்னர் இந்த இடத்தில் ஏரி இருந்ததா? குளம் இருந்ததா? பட்டா இருக்கின்றதா? என்பதை பார்த்து பெரும்பாலானோர் வாங்குவதில்லை. சதுர அடி ரூ.500 சொன்னால் ரூ.490க்கு தாருங்கள் என்று பேரம் பேசுகின்றார்களே தவிர அந்த இடத்தில் வீடு கட்டினால் பின்னால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பெரும்பாலானோர் யோசிப்பதில்லை’
மேலும் அபார்ட்மெண்ட் என்ற பெயரில் பத்து மாடி, 15 மாடி என விண்ணை முட்டும் கட்டிடங்களுக்கு போதுமான கழிவுதண்ணீர் வெளியேற்றும் குழாய்கள் இருக்கின்றதா? என்பது குறித்த தெளிவும் இங்கே யாருக்கும் இல்லை. சென்னை நகரம் இப்படித்தான் அமைக்கப்பட வேண்டும் என நூறு வருடங்களுக்கு முன்பே திட்டமிட்ட அறிக்கையில் சென்னை நகரில் எங்கேயெல்லாம் வீடு கட்ட கூடாது, எங்கேயெல்லாம் வீடு எந்த உயரத்தில் கட்ட வேண்டும் என்பது குறித்த தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. இந்த தகவல்களை இணையத்தின் உதவியால் படிக்காமல் தங்கள் இஷ்டத்திற்கு வீடு கட்டுவதால்தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
குறிப்பாக ஆற்றுக்கு செல்ல வேண்டிய தண்ணீர் பாதையை அடைத்து வீடு கட்டுவதால்தான் சென்னை நகரம் இவ்வளவு பெரிய துயரத்தை சந்தித்துள்ளது. இந்த மாநிலத்தை கடந்த 50 வருடங்களாக ஆண்டு வரும் திராவிட கட்சிகளின் அரசை மட்டும் குறைகூற முடியாது. பொதுமக்களும்தான் இதற்கு காரணம். பொதுமக்களின் எல்லை மீறிய ஆசை, குறைந்த விலைக்கு கிடைக்கும் மனைகளில் தரமற்ற வீடு கட்டுவது ஆகியவைகளும் இந்த பாதிப்பிற்கு காரணம்.
மேலும் ஒரு இயற்கை பேரிடர் வரும்போது உடனடியாக மின்னல் வேகத்தில் மாயாஜாலம் செய்து இடர்களை நீக்கிவிட முடியாது. படிப்படியாக ஒவ்வொன்றாகத்தான் ஒரு அரசு செய்ய முடியும். முதலில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவது, குப்பைகளை நீக்குவது, தொற்று நோய் பரவாமல் காப்பது, மருத்துவ உதவிகள் செய்வது, உணவு, தண்ணீர் உள்பட அத்தியாவசிய பொருட்களை வழங்குவது என அரசும், தொண்டு நிறுவனங்களும், தனியார் அமைப்புகளும் ஆங்காங்கே நிவாரண பணிகளை செய்து கொண்டுதான் இருக்கின்றது. எங்கே நிவாரண உதவி கிடைக்கவில்லையோ, அந்த பகுதிக்கு சென்று நிவாரண வேலையே நடைபெறாதது மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அரசுக்கு அவப்பெயரை பெற்று கொடுக்கும் முயற்சியை இந்த நேரத்தில் கைவிட வேண்டும். நிவாரண உதவியால் அரசுக்கு நல்ல பெயர் ஏற்பட்டு அதனால் வரும் தேர்தலில் அதிக வாக்குகள் ஆளுங்கட்சி பெற்று விடுமோ என்ற பயத்தில் எதிர்க்கட்சிகள் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த இயற்கை பேரிடரில் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால் அரசு அவ்வப்போது எந்த இடத்தில் என்ன மாதிரியான வீடுகள் கட்ட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில் பொதுமக்களும் சென்னைக்கு மிக அருகே என்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் போலி விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் அந்த இடம் உண்மையிலேயே வீடுகட்ட தகுந்தவைதான் என்பதை ஆராய்ந்து வாங்க வேண்டும்.