அமெரிக்க வாழ் இந்தியரான ரிச்சர்ட் ராகுல் வர்மா என்பவரை அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவின் புதிய அமெரிக்க தூதராக நியமனம் செய்துள்ளார். இந்த தகவல் நேற்று அதிகாரபூர்வமாக வெள்ளை மாளிகையில் இருந்து வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஒபாமா அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்திய அமெரிக்க உறவு மேம்பட்டு வரும் இந்த முக்கிய நேரத்தில், அமெரிக்க மக்களுக்காக தங்கள் திறமைகளை அர்பணிக்க சிறந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள ரிச்சர்ட் வர்மா, மாநில சட்ட விவகாரங்கள் துறையில் துணைச் செயலாளாராக ஏற்கனவே பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அவர் தனியார் துறையில் பணியாற்றி வரும் அவருக்கு தூதரக பதவி கொடுத்து ஒபாமா அவரை கெளரவித்துள்ளார்.
அமெரிக்க செனட் சபை ஒபாமாவின் நியமனத்தை உறுதி செய்தால், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தூதராக பணியாற்றும் முதல் இந்திய அமெரிக்கர் இவர் என்ற பெருமையை அவர் அடைவார்.
பிரதமர் நரேந்திரமோடி இந்த மாத இறுதியில் அமெரிக்க பயணம் செய்ய உள்ள நிலையில், இந்த அறிவிப்பு இந்திய அரசை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.