ஐபோனுக்காக அறிமுகமாகி இருக்கும் புதிய செயலி, ‘ஹூக்டு’. இந்த செயலியில் ஸ்மார்ட்போன் தலைமுறை இக்கால இலக்கியத்தை வாசிக்கலாம்.அதாவது, வாட்ஸ் அப் செய்திகளை படிப்பது போலவே இந்த கதைகளையும் படித்துவிடலாம்.
அதற்கேற்ற வகையில் எல்லாமே சில நிமிட வாசிப்புக்கு ஏற்ற சின்ன கதைகள்.கதையின் அளவு மட்டும் அல்ல, அவை சொல்லப்படும் விதமும் நவீன தலைமுறைக்கானது.கதைகள் வர்ணனை, விவரிப்பு எல்லாம் இல்லாமல் குறுஞ்செய்தி வடிவில் அமைந்திருக்கும். போனில் வரும் குறுஞ்செய்திகளை படிப்பது போலவே இந்த கதைகளை சுவாரஸ்யமாக படித்து முடித்து விடலாம்.
செயலிகள் உருவாக்கத்தில் அனுபவம் உள்ள பிரேனா குப்தா தனது கணவர் பராக் சோர்டியாவுடன் இணைந்து இந்த புதிய செயலியை உருவாக்கி உள்ளார். கடிதங்கள் வாயிலாகவே கதை சொல்லும் உத்தி ஒன்றும் புதிதல்ல. புகழ்பெற்ற டிராகுலா நாவலின் கதை, கடிதங்கள் வடிவிலேயே அமைந்திருக்கும் என்று கூறுபவர் ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு ஏற்ற வகையில் இப்போது குறுஞ்செய்தி வடிவில் கதைகளை உருவாக்கி ‘ஹூக்டு’ செயலி மூலம் அளிக்கிறோம் என்கிறார் குப்தா.
இந்த செயலிக்காக முதுகலை நுண்கலை பயிற்சி திட்டத்தின் மூலம் பலரை தொடர்பு கொண்டு குறுஞ்செய்தி வடிவ கதைகளை எழுதச்சொல்லி இருக்கிறார். வருங்காலத்தில் பயனாளிகளையே எழுதச்சொல்லி அவற்றை செயலியில் இடம்பெறச்செய்யும் திட்டமும் இருக்கிறது என்கிறார்.அப்படியே சக பயனாளிகளை பின் தொடரும் வசதி மற்றும் கருத்து பரிமாற்ற வசதிகள் அறிமுகமாக இருப்பதாகவும் சொல்கிறார். அறிமுகமான வேகத்தில் ஹூக்டு பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வரவேற்பு தொடர்கிறதா என்று பார்க்கலாம்.
செயலியை பற்றி அறிய: http://apple.co/1j9gVhw