இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் லைக்கா நிறுவனம் கத்தி படத்தை தயாரித்ததாக கூறி பெரும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தற்போது சென்னையில் லைக்கா நிறுவனம் பிரமாண்டமான மருத்துவமனை கட்ட இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் துணைத் தூதர் பரத் ஜோஷி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல -லைகா- மொபைல் நிறுவனம் அண்மையில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஒன்றில் ரூ. 100 கோடி அளவுக்கு முதலீடு செய்தது. இந்த நிறுவனம் இப்போது மத்தியச் சென்னைப் பகுதியில் மிகப் பெரிய மருத்துவப் பரிசோதனை மையத்தை அமைக்க உள்ளது.
தமிழகத்திலுள்ள பிரபல மருத்துவமனைகளுடன் இந்த மருத்துவ ஆய்வகம் கைகோர்த்து, ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேனிங் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளும்.
வருகிற 2015 ஜூன் மாதம் இந்த மருத்துவ ஆய்வகம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழக மக்கள் குறைந்த கட்டணத்தில் தரமானச் சேவையைப் பெற முடியும் என்று கூறினார்.
கத்தி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த மருத்துவமனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா? அல்லது தமிழக மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவம் கிடைக்கவிருக்கின்றது என்பதற்காக அமைதியில் முழ்கிவிடுவார்களா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.