தமிழ் சினிமாவில் பேய்ப்படங்கள் தொடர்ந்து ஹிட்டாகி வருவதால் அடுத்து பிரபல நடிகர்களின் பார்வையும் பேய்ப்படத்தை நோக்கி சென்றுள்ளது. அரண்மனை, டார்லிங், காஞ்சனா 2, டிமாண்ட்டி காலனி, மாஸ் ஆகிய படங்களின் வெற்றியை அடுத்து ஆர்யாவும் தனது படத்தை பேய்ப்படமாக மாற்றியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் கார்த்தி நடித்து வரும் ‘காஷ்மோரா’ படத்தின் கதையும் பேய்ப்படக்கதைதான் என்றும் செய்தி வெளிவந்துள்ளது.
கிட்டத்தட்ட அஜீத், விஜய் தவிர அனைவருமே பேய்ப்படத்தை நோக்கி சென்றுவிட்டதாகவும், இது கோலிவுட்டுக்கு ஆரோக்கியமான நிலை அல்ல என்றும் சீனியர் இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.
பேய்ப்படங்கள் என்றாலே ரத்தத்தை உறைய வைக்கும் திகில் படங்கள் என்ற நிலை மாறி பேய்ப்படங்கள் என்றால் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் பார்க்கக்கூடிய காமெடி படங்களாக கோலிவுட் இயக்குனர்கள் மாற்றிவிட்டதாகவும், இதே நிலை தொடர்ந்தால் கோலிவுட்டில் கதைப்பஞ்சம் ஏற்படும் நிலை வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும் தனது அடுத்த படத்தை பேய் சம்பந்தப்பட்ட படமாக எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆலோசனை தற்போது நடந்து வருவதாகவும், தன்னுடைய ஸ்டைலில் பிரமாண்டமாக புதுமுகங்களை வைத்து ஓரு பேய்ப்படத்தை அவர் எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் ஷங்கரின் தரப்பில் இருந்து இதுகுறித்து எவ்வித தகவல்களும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.