பாமகவின் செல்வாக்கை குறைக்கத்தான் மதுவிலக்கு போராட்டமா? ஒரு பகீர் ரிப்போர்ட்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என போராடி வரும் அரசியல் கட்சிகள் ஒருவேளை மதுவிலக்கு வந்தால், அதன் பெருமை யாருக்கும் போகும் என்பதில் தற்போது கவலைப்பட தொடங்கிவிட்டன. இதன் தாக்கம்தான் சமீபத்தில் வைகோவுக்கு டாக்டர் ராமதாஸ் தெரிவித்த கண்டன அறிக்கை. மாணவர்களை வைகோ, வன்முறையில் ஈடுபட தூண்டுகிறார் என்ற ராமதாஸின் அறிக்கை தனக்கு வரவிருந்த நல்ல பெயர் வைகோவுக்கு போய்விடுமோ என்ற பயத்தில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பல ஆண்டுகளாக மதுவிலக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாமகவுக்கு அந்த பெருமையெல்லாம் போய்விடக்கூடாது என்பதற்காகவே மற்ற கட்சிகள் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாகத்தான் பெரும்பாலான பொதுமக்கள் கருதுகின்றனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெரிய கட்சியான திமுகவே ஒரு எம்.பி.தொகுதியில் கூட வெற்றி பெறமுடியவில்லை. 11 தொகுதிகளில் நின்ற தேமுதிக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. பாஜக தவிர வேறு எந்த கட்சியும் ஒரு எம்.பி.தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால் பாமக ஒரு இடத்தில் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்தது. எனவே பாமகவின் மதுவிலக்கு பிரச்சாரம் மக்களின் மனதில் பதிய ஆரம்பித்துவிட்டதால், இந்த கட்சிக்கு செல்வாக்கு கூடி வருவதை பொறுக்க முடியாத மற்ற கட்சிகள், தாங்களும் மதுவிலக்கு போராட்டத்தில் தீவிர ஈடுபாட்டை காட்டி வருகின்றனவோ? என்ற சந்தேகம் நடுநிலையாளர்களின் மனதில் எழுகின்றது.
இதை நிரூபிப்பதுபோல் இன்று அறிக்கை விடுத்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, “ராமதாஸ் அவர்கள், ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க.வுடனோ, அ.தி.மு.க.வுடனோ கூட்டணி அமைத்துக் கொண்டு போட்டியிட்டபோது, மதுவிலக்கை ஒரு நிபந்தனையாக எந்தக் கட்டத்திலாவது வைத்தது உண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனவே எதிர்க்கட்சிகளின் இந்த மதுவிலக்கு போராட்டம் உண்மையிலேயே மதுவுக்கு எதிரான போராட்டமா? அல்லது ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த செய்யும் போராட்டமா? அல்லது பாமகவின் வளர்ச்சியை கண்டு பொறுக்காமல் ஏனைய கட்சிகள் செய்யும் போராட்டமா? என்று புரியாமல் உள்ளனர் நடுநிலையாளர்கள்