விஜயகாந்த் நடத்திய ரகசிய யாகம் எதற்காக? புதிய தகவல்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அடிக்கடி பொது இடங்களிலும், மேடைகளிலும் கோபப்படுவதாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சட்டமன்றத்தில் கூட முதல்வர் ஜெயலலிதா முன்னிலையிலேயே அவர் திடீரென கோபப்பட்டதை அனைவரும் அறிவர். இந்நிலையில் தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிய அறிவுரையின்படி பிரபல ஜோதிடர் ஒருவரிடம் இதற்காக ஆலோசனை கேட்கப்பட்டதாகவும், அவருடைய அறிவுரையின்படி விஜய்காந்த் விஸ்வாமித்திரர் கோவிலில் யாகம் செய்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
விஜயகாந்த்தின் பிறந்தநாள் வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள விஜயாபதி என்ற கிராமத்தில் உள்ள விஸ்வாமித்திரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவது நல்லது என அவருக்கு நெருக்கமான ஜோதிடர் கூறிய அறிவுரையின்படி இன்று அதிகாலை 4 மணிக்கு விஜயகாந்த் இந்த கோவிலுக்கு வந்தார். இந்த கோவிலில்தான் விசுவாமித்திர முனிவர் உக்கிரத்துடன் வந்து யாகம் செய்து தனது கோபத்தை தணித்ததாக புராணங்கள் கூறுவதுண்டு.
விசுவாமித்திரரை போல தனது கோபத்தையும் தணிக்கும் வகையில் விஜயகாந்த் இந்த கோவிலில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடந்த இந்த யாகத்தில் கலந்து கொண்டதாகவும், யாகத்திற்கு பின்னர், அருகில் இருந்த வீரகாளியம்மன் கோவிலிலும் சென்று வழிபாடு நடத்தியதாகவும் செய்திகள் கூறுகின்றன.
விஜயகாந்த வருகை குறித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், கோவிலுக்கு யாரும் வரக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதால் எந்த கட்சி நிர்வாகிகள் யாரும் அவருடன் வரவில்லை. மனைவி, உதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் என வெகுசிலரே பிரேமலதாவும் சிறப்பு யாகத்தில் பங்கேற்றனர்.