விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸார் ஆலோசனை.

vinayagar sadhurthiவருகிற 29ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், அந்த சிலைகளை ஊர்வலமாக சாலைகளில் எடுத்துச் சென்று கரைப்பதற்கும் 23 நிபந்தனைகளை சென்னை காவல் துறையினர் விதித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள், பூஜைகளுக்கு பின்னர் கடல், ஆறு, குளம்  போன்ற நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். சென்னையில் இந்த ஆண்டுவிநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி, 1,864 சிலைகள் பிரதிஷ்டை செய்ய காவல் துறை முறையான அனுமதி வழங்கியுள்ளது.

ஒரு சிலைக்கு ஒரு கான்ஸ்டபிள் என்ற வகையில் விநாயகர் சிலைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பதற்றமிக்க ஒரு சில பகுதிகளில் மட்டும் கூடுதல் போலீஸார் காவல் பணியில்  ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்,புதிய இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று காலை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குப் பாதுகாப்பு அளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கூடுதல் ஆணையர்கள் கருணாசாகர், ஆபாஷ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இணை ஆணையர்கள் கே.சங்கர், கே.சண்முகவேல், ஆர்.திருஞானம், சி.ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், பாரத் இந்து முன்னனி, இந்து மகா சபை உள்ளிட்ட 23  இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், விநாயகர் சிலைகள் உயரம் 3 அடியில் இருந்து 14 அடி வரையே இருக்க வேண்டும். சிலையைப் பாதுகாப்பாக வைக்க குறைந்தது 5 பேர் அடங்கிய பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும். சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடம் அருகே வாகனம் நிறுத்தப்படக் கூடாது. பிற மதத்தினர் புண்படும் வகையில் பேசக் கூடாது. அனுமதிக்கப்பட்ட வழியிலேயே ஊர்வலம் செல்ல வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஊர்வலத்தின்போது ரகளையில் ஈடுபடக் கூடாது. தேவையற்ற முழக்கங்கள் எழுப்பக் கூடாது. கடலில் சிலையைக் கரைக்க செல்லும்போது 500 மீட்டர் முன்பே சிலையைக் கரைப்போரிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உயர் நீதிமன்றம் கூறியுள்ள விதிமுறைகளை கடைப்பிடிப்பது உள்ளிட்ட 23 விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பேசினர்.

Leave a Reply