-
ஒளி, ஒலியைவிட விரைவாகச் செல்லும்’ என்னும் இயற்பியல் கோட்பாடு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிவியல் அறிஞர்களால் கண்டு அறியப்பட்டது. இக் கோட்பாட்டை எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளக்குவது வழக்கம்.
வானில் காற்றால் உந்தப்பட்டு வேகமாகச் செல்லும்போது மேகத்திரள்கள் ஒன்றோடு ஒன்று மோதும். அப்போது இடியும் (ஒலி) மின்னலும் (ஒளி) ஒரே நேரத்தில் வானில் தோன்றும். மின்னல் பூமிக்கு முதலில் வந்துசேரும். சில நொடிகளுக்குப் பின்பு இடியோசை பூமிக்கு வந்துசேரும்.
இத்தகைய ஒலிக்கும் ஒளிக்கும் இடையே உள்ள விரைவு வேறுபாட்டைப் பண்டைத் தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தனர். விரைவைக் குறித்து விளக்குவதற்கு பல உவமைகள் தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.
“புல் நுனிமேல் நீர் போல்’ (நாலடியார்-29)
“மலை ஆடு மஞ்சு போல’ (நாலடி-28)
“நீர்க்கோல வாழ்வு’ (கம்பர், கும்பகருணன் வதை-155)
“திசையுறச் சென்றன தையலார் நெடுவிழி எனச் சரங்கள்’
(கம்பர்-கரன் வதை-105)
“நிலையிலாப் புற்புத வாழ்வை நிலையென மருண்டு’
(அரிச்சந்திர புராணம்) என வாழ்வு அழிவதன் விரைவைப் பலவாறு கூறியுள்ளனர் சான்றோர்.
சங்கப் புலவர் ஒருவர் இளமையும் இன்பமும் எவ்வளவு விரைவாக அழியும் என்பதை விளக்குவதற்கு உவமையாக ஓர் அம்பின் செயலைக் கூறியுள்ளார். விரைவுக்கு அம்பை உவமையாகக் கூறுவது பல புலவர்களும் கையாண்ட முறைதான். ஆனால், இப்புலவர் கூறிய உவமையில் ஒரு சிறப்பும் அறிவியல் உண்மையும் காணப்படுகின்றன.
“வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய்கணை நிழலின் கழியும் இவ்வுலகத்து’ (நற்றிணை-46)
“இன்பமும் இளமையும் அம்பின் செலவைப் போல விரைந்து அழியும்’ என்பது இவ்வடிகளின் பொருள். வெறும் “அம்பு’ என்று கூறாது “அம்பின் நிழலைப் போல்’ என்று கூறியுள்ளது நோக்கத்தக்கது. அம்பின் செலவு என்றால் அதன் காட்சியாகிய ஒளியும், அதன் ஓசையும் அடங்கும். ஓசையை முந்திக்கொண்டு காட்சி செல்கிறது என்ற அறிவியல் கருத்தை அடக்கி “கணை நிழல்’ என்றார். நிழல் என்னும் சொல்லுக்கு “ஒளி’ என்ற பொருள் உண்டு என்பது பின்வரும் சான்றுகளால் அறியலாம்.
“நிழல் விரவு தனது முன்னர் நகை’ (மூவருலா -1:136); “நிழல் திகழும் வெண்மழு வாள்’ (அப்பர்
தேவாரம்); “நிழல் வெண்ணகைக் கொவ்வை வாய்’ (திருஞானசம்பந்தர்
தேவாரம்); “அழல் வினை அமைந்த நிழல்விடு கட்டி’ (பதிற்றுப்பத்து-81); “நிழல் திகழ் நீல நாகநல்கிய கலிங்கம்'(சிறுபாண்-95).
“நிழல்’ என்னும் சொல் “ஒளி’ என்னும் பொருள் தந்து “காட்சி’ என்ற பொருளைத் தருகிறது. 27, 1101 ஆகிய இரு குறட்பாக்களை ஒப்பு நோக்கின் இக்கருத்து புலனாகும்.
அம்பை எய்யும் வில்லாளிகள் அது விரைந்து செல்லும்போது ஓசையை உண்டாக்குவதற்கு அம்பின் வால் பகுதியில், பருந்தின் சிறகுகள் சிலவற்றை வைத்துக் கட்டுவது வழக்கம். அந்த ஓசை கேட்பவர்க்கு அச்சத்தை உண்டாக்கும் என்பது,
“புனிற்றுநிரை கதித்த பொறிய முதுபாறு
இறகுபுடைத்து இற்ற பிறைப்புன் தூவி
செங்கணை செறிந்த ஆடவர்’ (நற்-329)
என்னும் பாடலால் விளங்கும். அம்பு காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும்பொழுது உண்டாகும் ஓசை ஆடவர்கள் தங்கள் விரலை வாயில் வைத்து இதழ் குவித்து எழுப்பும் சீழ்க்கை ஒலியைப் போன்று இருக்கும்
என்பது, “வீளை அம்பின் வில்போர்ப் பெருமகன்’ (நற்றி-264)
(வீளை -சீழ்க்கை) என்னும் பாடலின் வாயிலாகத் தெரிகிறது.
அம்பு செல்லும் காட்சியும், ஒலியும் ஒரே நேரத்தில் உண்டானாலும் மக்களைச் சென்று அடையும்போது காட்சி முதலிலும் ஒலி பின்னரும் சேரும் என்று உணர்த்த அம்பின் வடிவத்தை மட்டும் புலவர் சிறப்பித்து, அம்பு என்று கூறாது, அம்பின் தோற்றம் என்று கூறியது புலவரது அறிவியல் புலமையைப் பறைசாற்றுகிறது.