இருபதாம் நூற்றாண்டு உலகில் கம்ப்யூட்டரின் வரவு மிக முக்கியமானது. உலகின் போக்கை தீர்மானித்ததிலும், சராசரி மனித வாழ்க்கையின் பாங்கை மாற்றியதிலும் இது பெரும் பங்களிப்பை செய்திருக்கிறது. அன்றைய சோவியத் யூனியன் இதனை விண்வெளி ஆராய்ச்சிக்கும், அமெரிக்கா ராணுவ விரிவாக்கத்திற்கும் பயன்படுத்திக்கொண்டது.
பனிப்போர் காலக்கட்டத்தில் இந்த கம்ப்யூட்டர் முக்கிய இடத்தை வகித்ததை அரசியல் வரலாறு பதிவு செய்கிறது . இதன் தொடர்ச்சியாக இணையதளத்தின் வரவு மேலும் பரிணாமத்திற்கு உட்படுத்தியது. தனிமனிதர்களாக சுருங்கிய உலகத்தை இணையம், வலைப்பின்னல் மூலம் இணைத்தது. இப்போது எல்லா மனிதர்களும் அதில் தொடர்பு கொள்ள முடிகிறது. தகவல் தொடர்பு என்ற சொல்லின் அர்த்தமே பரிணாமத்திற்கு உட்பட்டதாக மாறியது. உதாரணமாக தகவல் தொடர்பு என்பது இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் போக்குவரத்தை (Transportation) தான் குறித்தது. ஆனால் இன்றைக்கு இதன் அர்த்தம் என்பது நவீன தொலை தொடர்பு மற்றும் இணையம் சார்ந்த தொடர்பு முறைகளை குறிக்கிறது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உருவாக்கம்…
நவீன உலகில் எல்லா தொழில்நுட்ப செயல்பாடுகளும் புரோகிராம் என்ற தொழில்நுட்ப குறியீட்டு முறையால் அமைக்கப்படுகின்றன. இந்த குறியீட்டு முறையை உள்ளடக்கிய மென்பொருளால் எதையும் செய்ய முடியும். ஒருவரின் அலைபேசி இணைப்பை துண்டிக்கலாம். மின் விசிறியை இயக்கலாம். ஏசியை தொலைதூரத்திலிருந்து கட்டுப்படுத்தலாம். ஏன் மனிதர்களை கூட கட்டுப்படுத்த முடியும். சோவியத் யூனியனின் சிதைவு இந்த துறையில் உலக அளவில் அமெரிக்காவின் ஏகபோக நிலையை உருவாக்கியது. 90 களில் இதற்கான வாயில்கள் திறக்கப்பட்டன. அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் இயங்குதளம் மூலம் இதனை நிரூபித்தது. அதுவரை சமூகத்தின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனிதர்கள்தான் கம்ப்யூட்டரை பயன்படுத்த முடியும் என்றிருந்த நிலைமாறி சாதாரண மனிதர்களும் கம்ப்யூட்டரை பயன்படுத்தலாம் என்ற நிலைமையை மைக்ரோசாப்ட் உருவாக்கியது. மைக்ரோசாப்ட் குறித்த விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்தாலும், இதனை நாம் நிராகரிக்க முடியாது.
தொழிற்துறை பல பிரிவுகளாக பரிணாமமடைந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், தகவல் தொழில்நுட்ப துறை சேவைத்துறையில் அடங்குகிறது. இதற்கு உற்பத்திக்கு தேவையான பெரும் இயந்திரங்கள் தேவையில்லை. ஏக்கர் கணக்கில் நிலங்கள் தேவையில்லை. மாறாக மனித வளம்தான் பெரும் மூலதனம். அதாவது திறன்பெற்ற, விசுவாசமான மனித மூளைகள் தான் இதற்கு தேவை. தற்போது ஆங்கிலத்தின் இதனை Wetware என்ற புதிய கலைச்சொல்லால் குறிப்பிடுகிறார்கள். அதாவது ஈரமான மூளைகள். மென்பொருள் மூளைகள் எப்போதும் ஈரமாக இருந்தால்தான் அதனை வடிவமைக்க முடியும். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்பது மென்பொருள் என்பது அறிவியல் அல்ல. மாறாக அறிவியல் கோட்பாட்டை பொருத்தி பார்க்கும் ஒரு தொழில்நுட்ப வகை. இந்த தொழில்நுட்ப மூளைகளுக்கு விஞ்ஞானிகள் மாதிரியான அடிப்படை அறிவு தேவையில்லை. குறிப்பிட்ட கட்டளைகளைக்கொண்டு இயங்கக்கூடிய ராபர்ட் மாதிரி தங்கள் மூளைகளை கசக்கிக்கொண்டால் போதும்.
இந்நிலையில் 90 களில் இந்தியாவில் உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் கால்களை பதிக்கத்தொடங்கின. மேலும் புத்தாயிரத்திற்கு பிறகு பன்னாட்டு நிறுவனங்களும் நுழையத்தொடங்கின. பெங்களூர், ஐதராபாத், சென்னை போன்ற பெருநகரங்கள் அதன் முக்கிய தளங்கள். கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் உருவான படித்த மத்திய தரவர்க்கத்திற்கு இந்த துறை பெரும் உள்வாங்கலாக இருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியிலும், அந்நிய செலவாணியிலும் இது பெரும் பங்களிப்பை செலுத்துகிறது என்பது ஓர் உண்மை தான். ஆனால் மத்திய தரவர்க்க வாழ்வாதாரம் என்ற ஒரே நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு அந்நிய சக்திகளின் விசுவாசமான அடிமைகளாக இதன் பணியாளர்கள் உருவாக்கப்பட்டது இந்தியாவின் நூற்றாண்டு அவலம். குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளை சார்ந்து தங்கள் மூளைகளை, உடல்களை மாற்றிக்கொள்ள இவர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள். அமெரிக்காவில் அடிக்கும் வெய்யில் மற்றும் பெய்யும் மழையை பொறுத்தே இந்த மூளைகள் ஈரமாவதும், வறட்சி அடைவதும் தீர்மானிக்கப்படுகின்றன.
கால்சென்டர்களின் வருகை…
பி.பி.ஓ என்ற வணிக புறப்பணியாக்கத்தின் ஒரு பகுதியான கால்சென்டர்களின் வருகை ஈரமான மூளைகள் என்பதை தாண்டி ஈரமான உடல் என்பதாக பரிணாமமடைந்தது. அதாவது பாடகர் போன்ற குரல் வளம், இரவு, பகல் ஆகியவற்றை தாங்கும் உடல் திறன், மொழிதிறன் போன்றவை இதற்கு அடிப்படையாக இருந்தன. இங்கும் மனிதவளமே முன்னிலை பெறுகிறது. இந்தியாவின் பெருநகரங்களில் அமைந்த கால்சென்டர்கள் தங்களின் பணியாளர்களை 12 மணி நேரம் வேலை செய்ய வைத்து அவர்களை அசைவற்ற உடல்கள் போன்று மாற்றின. தொடர்ந்து வரும் அழைப்புகள் அதற்கு அவர்கள் அளிக்கும் பதில்கள், தீர்வுகள் உளவியல் ரீதியாகவும், அதிக வேலைநேரம் உடலியல் ரீதியாகவும் அவர்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கின. உலகமயமாக்கல் வளரும் நாடுகளுக்கு அளித்த பெரும் துயரம் இது. மேலும் பாதுகாப்பற்ற சூழலிலும் பெண் பணியாளர்களை இரவு நேரத்தில் பணி செய்ய வற்புறுத்துவது அல்லது அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் இருப்பது, இரவு நேர பணியின் சிக்கல்களை ஆராயாமல் அவர்கள் மீதான புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பது ,குறைந்த சம்பளம், மிகுந்த பணிஅழுத்தம் போன்றவை மேற்கண்ட கால்சென்டர்களின் எதார்த்தம்.
நவீன அடிமைகளின் தேடல்…
இந்தியா போன்ற நாடுகளில் மலிவாக கிடைக்கும் மனிதவளம் மேலை நாடுகளுக்கு மிக சாதகமான பொருளாதார சூழலை ஏற்படுத்துகின்றன. கால்சென்டரின் தோற்றத்தை இவ்வாறு தான் பார்க்க வேண்டியதிருக்கிறது. அடிமைகளின் மனோபாவம் என்பது எப்போதும் மற்றொரு பிரதேசத்தை உயரப்படுத்துதலில்தான் அடங்கியிருக்கிறது. புத்தாயிரத்தின் தொடக்கத்தில் கம்ப்யூட்டரில் பொறியல் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் அமெரிக்கா போய்விடலாம் அதன் மூலம் சொர்க்கத்தை நேரில் கண்ட அனுபவம் கிடைக்கும் என்பதான வதந்திகள் பரவலாக படித்த மத்திய தரவர்க்கத்திடம் அன்றைக்கு உலவின.
பின்னர் அமெரிக்காவில் ஏற்பட்ட வீழ்ச்சி அப்படியே இங்குள்ளவர்களை சரிய வைத்தது. பெரும்பாலும் அமெரிக்க வேலைதிட்டங்கள் மற்றும் சேவையை நம்பியிருக்கும் இங்குள்ள நிறுவனங்கள், தங்களின் பணியாளர்களின் முதுகுகளை அவர்களுக்கு தகுந்த மாதிரி வளைக்கின்றன. இதில் ஒடிந்து போனவர்கள் ஏராளம். தகவல் தொழில்நுட்பம் மற்றும் கால் சென்டர் பணியாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் 200 க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். இதில் மன அழுத்தங்களால், மூளை அயற்சியால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களும் உண்டு. மேலும் இந்தியாவில் சமீபகாலமாக அதிகரித்திருக்கும் விவாகரத்துகள் தகவல் தொழில்நுட்ப துறை பணியாளர்களிடத்தில்தான் அதிகம் காணப்படுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. கணவன் – மனைவியை பரஸ்பரம் தினசரி சந்திக்க விடாமல் இந்த நிறுவனங்கள் ஏற்படுத்தும் வேலை நேர முறை, இதற்கு தொடக்க காரணமாக இருக்கிறது. இதிலிருந்து தொடங்கி ஒவ்வொன்றாக பரிணமித்து, இறுதியில் விவாகரத்தில் கொண்டு போய் முடிகிறது.
அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலைக்கு பிறகு இந்தியாவின் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூடப்பட்டன. பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்தன. அதன் பிறகு அவை மீள்வதும், வீழ்வதுமான இடைவெளியில் பயணம் செய்துகொண்டிருக்கின்றன.
பணியாளர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டால் உற்பத்தி திறன் குறையும் என்பது பொருளாதார விதி. ஆனால் அவை உற்பத்தி துறையில் மட்டுமே பெரும்பாலும் பின்பற்றப்படுகின்றன. ஆனால் சேவைத்துறையில் இன்னும் அது தொடர்கிறது. பிரத்யேகமான பிளாஷ் நியூஸ் மாதிரியே தங்களின் வாடிக்கையாளர்களுக்கு மிகக்குறைந்த நேரத்தில் அந்த சேவையை பிறரை விட முந்திக்கொண்டு அளித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கண்ட நிறுவனங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
தனியார்மயமாக்கல் சூழலில் ஒரு கார்ப்பரேட் நிர்வாக நடைமுறைகளில் அரசு தலையிட முடியாது என்றாலும், அதன் தார்மீக பொறுப்பு என்ற அளவுகோலின் படியும், இந்திய தொழிலாளர் சட்டம் என்பதின் அடிப்படையிலும் கார்ப்பரேட் சார்ந்து சில நெறிமுறைகளை உருவாக்கலாம். அவை உடனடியாக உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் அவசியம்