முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் எப்படி?
தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் வி.ஐ.பி தொகுதி அந்தஸ்து பெற்றுள்ள நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து இரண்டு பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒருவர் திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன்.
திமுக தொண்டர்கள் காலை முதலே வாக்குகளை சேகரிக்க சுறுசுறுப்புடன் செயல்பட்டு வந்தாலும் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட கொருக்குப்பேட்டை மேம்பாலம், ஸ்டான்லி சுரங்கப் பாலம், பளபளக்கும் வழுக்கு வீதிகள், எந்நேரமும் ஒளிரும் நியான் பல்புகள் சொகுசு வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த தொகுதி மக்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றே விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும் முதல்வர் தொகுதி என்ற அந்தஸ்தையும் இத்தொகுதி மக்கள் இழக்க விரும்பவில்லை என்பது தெரிய வருகிறது.
அதேபோல் மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளர் டாக்டர்.வசந்திதேவிக்காக கம்யூனிஸ்ட் தோழர்களும், விடுதலைச்சிறுத்தை தொண்டர்களும் சுழன்றடித்து தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் தொகுதி மக்கள் வசந்திதேவி என்றால் யார்? என்றுதான் பலரும் கேட்கின்றனர். இருப்பினும், திமுகவின் தேர்தல் பணியை விட மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் பணி சிறப்பாக இருப்பதால் இரண்டாவது இடத்திற்கு வசந்திதேவி வருவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.