அமெரிக்கா, கனடா நாடுகளில் வரலாறு காணாத பனி – 16 பேர் பலி

ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து கடுமையான குளிர்காற்றுடன் கூடிய பனிப்புயல் தெற்கு நோக்கி வீசுவதால் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் வரலாறு காணாத அளவிற்கு கடும்பனி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்காவில் -20C வெப்பநிலையும், கனடாவில் -45 C வெப்பநிலையும் நிலவுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடுமையான பனி காரணமாக சாலைகள் எங்கும் இரண்டு அடி உயரத்திற்கு பனி கொட்டிக்கிடப்பதால் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான விமானங்கள், ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் இன்றி இருளில் மக்கள் தவிக்கின்றனர்.

இந்த கடுமையான பனி காரணமாக இதுவரை 16 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஒரு வாரமாக பனிப்பொழிவு குறையாததால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply