விஷாலின் ஒரு ரூபாய் திட்டம் சிறுபிள்ளைத்தனமானது. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கண்டனம்

விஷாலின் ஒரு ரூபாய் திட்டம் சிறுபிள்ளைத்தனமானது. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கண்டனம்

நடிகர் சங்க செயலாளர் பதவியை அடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியையும் கைப்பற்றிய நடிகர் விஷால் சமீபத்தில் பதவியேற்றபோது ‘தமிழக திரையரங்கில் ரசிகர்கள் வாங்கும் ஒவ்வொரு டிக்கெட்டிலும் ஒரு ரூபாய் எடுத்து விவசாயிகளுக்கு கொடுக்க உள்ளதாக புதுமையான திட்டம் ஒன்றை அறிவித்தார். இந்த நிலையில் விஷாலின் இந்த அறிவிப்புக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் பி கண்ணப்பன் கூறியபோது, ‘நான் விஷால் பேசியதைத் தொலைக்காட்சி ஊடகங்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஒரு டிக்கெட்டிலிருந்து ஒரு ரூபாய் என்று அறிவிப்பு செய்து இருக்கிற விஷாலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. விஷால் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறார். இப்போது அவர் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பொறுப்புக்கு வந்திருக்கிறார். அவர், தான் சம்பந்தப்பட்ட சங்கம் சார்ந்து பேசினால் பிரச்சினை இல்லை. ஆனால் எங்கள் சங்கம் தொடர்பாக அறிவிப்பு செய்ய அவர் யார்? அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? அவருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கும் என்ன சம்பந்தம்? அவர் ஒன்று செய்யலாம். அவர் விவசாயிகளுக்காக சம்பளமே வாங்காமல் ஒரு படம் நடித்துக் கொடுக்கலாம். நடிகர் சங்கத்தைக் கூட்டி எல்லா நடிகர்களும் தங்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் குறைத்து அதை விவசாயிகளுக்கு வழங்கலாம்.

தயாரிப்பாளர் சங்கத்தைக் கூட்டியும் இப்படி ஏதாவது வழங்கலாம். ஆனால் எங்களை இதில் சம்பந்தப் படுத்துவது ஏன்? வருகிற படங்களில் 99% படங்கள் லாபமில்லை. இந்நிலையில் தம்பி விஷால் ஒன்றும் புரியாமல் இப்படிச் சொல்வது சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. இது அவருக்கு இது பற்றித் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. அவருக்கு அனுபவம் இல்லை. அப்படி என்றால் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். இப்படி எதுவும் புரியாமல் குழப்படி செய்யக் கூடாது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசக்கூடாது. இது பற்றி விஷாலோடு ஊடகங்களிலோ அல்லது எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று கூறினார்.

Leave a Reply