கல்லும் காணிக்கையாகும்!
ராமநாதபுரத்திலிருந்து சத்திரக்குடி செல்லும் சாலையில் தீயனூர் கிராமத் தில் கம்பீரமாக காட்சி தந்து அருள்பாலிக்கிறாள் ‘ஓட்டமட காளியம்மன்’. பக்தியோடு பக்தர்கள் சமர்ப்பிக்கும் கல்லையும் காணிக்கையாக ஏற்று அருள்புரியும் கருணை நாயகி இவள்.
நாயக்கர்களால், அவர்களது ஆட்சிக்கு உட்பட்ட சேதுசமுத்திரக் கரைப் பகுதியைப் பாதுகாக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட நிர்வாகிகள்தான் சேதுபதிகள். அப்படி, 17-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்தப் பகுதியை நிர்வகித்தவர், கிழவன் ரகுநாதசேதுபதி. ஒருநாள், அவர் காளியம்மன் கோயிலுக்கு அருகில் வந்து கொண்டிருந்தபோது, மரத்தடியில் அமர்ந்திருந்த சித்தர் ஒருவர்,‘தனியொரு நாட்டுக்கு நீ அரசனாகும் காலம் கனிந்துவிட்டது’ என்று அருள்வாக்கு கூறிச் சென்றார். அதைக் கேட்டு பிரமித்த சேதுபதி, அம்பாள்தான் சித்தர் வடிவில் வந்து அருள்புரிந்ததாகக் கருதி, அருகில் இருந்த காளி கோயிலுக்குச் சென்று மனம் உருகி வழிபட்டார். சித்தர் வாக்கு விரைவில் பலித்தது.
18-ம் நூற்றாண்டின் துவக்கம், சேதுபதி மன்னர்களின் ஆட்சிக் காலத்தின் திருப்புமுனை மிக்க காலமாகத் திகழ்ந்தது. நாயக்கர்களின் கீழ் சேதுபதிகள் ஆட்சிபுரிந்தாலும், சிவகங்கை மற்றும் ராமநாதபுரப் பகுதிகளில் நிகழ்ந்த கட்டாய மதமாற்றம் கண்டு மிகவும் மனவேதனை அடைந்தார் கிழவன் ரகுநாத சேதுபதி. மக்களும் அச்சத்துடனே இருந்தனர். இந்தச் சூழலை அகற்றி, தனித்து நாடாள வேண்டும் என்ற எண்ணம் சேதுபதியின் மனதில் வலுப்பெற்றது. அதன் விளைவாக நாயக்க அரசியான ராணி மங்கம்மாளுடன் போரிட்டு வெற்றி பெற்றார் கிழவன் ரகுநாத சேதுபதி.
அன்றிலிருந்து நாயக்கர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதி சேதுபதி மன்னர்களின் வசம் வந்தது. மேலும் சேதுபதி மன்னர்களின் தலைநகரமாக ராமநாதபுரம் மாற்றப்பட்டது. அப்பகுதி ‘சேதுபதி சமஸ்தானம்’ என்றும் அழைக்கப்பட்டது. அன்றிலிருந்து மன்னர் கிழவன் ரகுநாத சேதுபதியின் இஷ்ட தெய்வமானாள் ஓட்டமட காளி.
அன்னையின் இந்த திருப்பெயருக்கும் சுவாரஸ்யமான ஒரு காரணம் உண்டு. பன்னெடுங்காலமாக ராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொள்பவர்கள், இவ்வூருக்கு அருகிலிருக்கும் ‘சத்திரக்குடி’ எனும் ஊரில் உணவு உண்டு, அருகில் 2 மைல் தூரத்திலிருந்த ‘மடத்தில்’ தங்கி ஓய்வெடுத்துவிட்டு, யாத்திரையை மேற்கொள்வார்களாம். காலப்போக்கில் யாத்திரீகர்கள் தங்கும் அந்த மடம் பழுதுபட்டது. கூரையில் பொத்தல் விழுந்ததால், ‘ஓட்ட மடம்’ என்றே அழைக் கப்பட்டது. அதன் அருகிலேயே கோயில் கொண்டிருந்த காளிதேவிக்கும், ஓட்டமட காளி என்ற பெயரே நிலைத்துவிட்டது.
கோயில் கருவறையில் வடக்கு பார்த்து அருள்கிறாள் காளியம்மன். மேலும், ஆதி காளியம்மன், விநாயகர், முருகர், தர்ம முனீஸ்வரர் ஆகியோரையும் தனிச் சந்நிதிகளில் தரிசிக்க முடிகிறது. போகலூர், சத்திரக்குடி, தீயனூர், தென்னவனூர் ஆகிய நான்கு ஊர் மக்களுக்கும் பொதுவானதாகத் திகழ்கிறது இந்தத் திருக்கோயில். கோயில் அருகில் இருக்கும் ஊரான போகலூரே ராமநாதபுர சமஸ்தானத்தின் தொடக்கமாக இருந்தது. எனவேதான் ஓட்டமடக் காளியை, எல்லை தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர்.
ஒவ்வொரு முறையும், இப்பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலை வழியாக பாலங்கள், வீடுகள் கட்ட ஜல்லி மற்றும் செங்கற்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களின் ஓட்டுநர்கள், அவற்றிலிருந்து சிறுபகுதியை காணிக்கையாக அம்மனிடம் வைத்து வழிபாடு செய்துவிட்டுச் செல்வார்கள். இதனால் அவர்களின் பயணமும், கட்டுமானத் தொழிலும் விபத்துகளோ, தடைகளோ எதுவும் இல்லாமல் இனிதே நிறைவுறும் என்பது நம்பிக்கை. அதேபோல், அம்மனை வேண்டிக்கொண்டு புதிய வாகனம் வாங்குபவர்கள், இங்கே வந்து வாகனத்துக்கு பூஜை செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இப்பகுதியில் ‘செங்கல் காளவாசல்’ தொடங்கும் வியாபாரிகள், அங்கு கிடைத்த முதல் கல்லை, இத்திருக்கோயிலுக்கு வந்து சமர்ப்பித்து வழிபட்டால், தொழில் சிறக்கும் என்று நம்புகின்றனர். அப்படி ஆயிரத்துக்கும் அதிகமான கற்கள் சேர்ந்ததும், அவற்றை ஏலம் விட்டோ அல்லது வீடு கட்ட முடியாமல் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு இலவசமாகவோ தருகிறார்கள். ஏலத்தின் மூலம் வரும் வருமானம் கோயில் திருப்பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருக்கு நாளில் புதுமணத்தம்பதிகள் ‘மாங்கல்யம் பெருக்கி’ இட்டால், மாங்கல்ய பலம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குழந்தை இல்லாதவர்கள் இங்கே வந்து அம்மனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தை பிறந்ததும் மீண்டும் கோயிலுக்கு வந்து கரும்புத் தொட்டில் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள். அத்துடன், கோயிலில் கூறைப் புடைவை விரித்து அதில் குழந்தையை தவழச் செய்வதுடன், கோயிலை மூன்று முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் குழந்தையின் வாழ்க்கை செழிக்கும் என்று மனப்பூர்வமாக நம்புகின்றனர் பக்தர்கள்.