இறைவனை வழிபடுவது என்பதே ஆனந்தம் அதிலும் இசையோடு இறைவனை வழிபடமுடியும் என்றால் பக்தர்களின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அப்படிப்பட்ட அற்புத ஆலயம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் உள்ள தென்னாங்கூரில் உள்ளது. இயற்கை எழில் நிறைந்துள்ள இந்த கிராமத்திற்கு அழகு சேர்ப்பதே இந்த ஆலயம் தான் என்றால் அது மிகையில்லை.
இந்த ஆலயம், கோவில்களுக்கு என உள்ள ஆகமவிதிப்படி தியான மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், ராஜகோபுரம் என அடுத்தடுத்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காண்போரை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராஜகோபுரத்தின் உயரம் 120 அடி ஆகும். அதற்கு மேல் தங்கக் கலசம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த அழகிய கோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கருவரையில் பிரம்மாண்டமாக காட்சி தரும் வகையில் பாண்டுரங்கனும், ருக்மனியும் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கருவரையில் பாண்டுரங்கனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, அவர்கள் கொடுக்கும் காணிக்கையான தேங்காய், பழம் ஆகியவற்றை பெற்றுக் கொண்டவுடன் திரைச்சீலை விலக்கப்படும். அப்போது கருவரையில் இருக்கும் பாண்டுரங்கனையும் ருக்மணியையும் காணும் பக்தர்கள் உள்ளத்தில், வைகுன்டத்தில் இறைவனை காண்பது போன்ற பிரமிப்பை எற்படுத்துகிறது.
ஒவ்வொரு நாளும் பாண்டுரங்கனுக்கு ஒவ்வொரு வகையான அலங்காரம் செய்யப்படுகிறது. இத்தகைய பூஜை நேரத்தில் இந்த ஆலயத்திற்கு எதிரில் அமைந்துள்ள சங்கீர்த்தன மண்டபத்தில் பஜனை குழுவினர் இறைவன் புகழ் பாடுகின்றனர். இந்த இசையும் பக்தர்களின் வழிபாடும் ஒன்று கலந்து பக்தர்களை பரவசமடையச் செய்கிறது.
இவ்வாறு பாண்டுரங்கனை தரிசிக்க வரும் பக்தர்களில் ஆண்கள் மேல்சட்டை அணியாமல் தான் ஆலயத்திற்குள் பிரவேசிக்கமுடியும். இந்த நடைமுறைதான் இங்கு பின்பற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அர்த்த மண்டபம், மஹா மண்டபம் ஆகியவற்றில் பைபர்கிளாசில் அழகிய வண்ண ஓவியங்களாக கண்ணனின்லீலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த அழகிய கலை வேலைப்பாடுகளும் இந்த ஆலயத்திற்கு சிறப்பு சேர்க்கின்றது.
இத்தகைய வேலைப்பாடுகள் நிறைந்த, ஆசியாவிலேயே மிகப்பெரிய கோவில் என்ற சிறப்பையும் இந்த ஆலயம் பெற்றிருக்கிறது. அதோடு இத்தகைய வேலைப்பாடு நிறைந்த ஆலயங்களில் உலகிலேயே மூன்றாவதும், பெரியதுமான ஆலயமும் இது தான் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது கோகுலாஷ்டமி விழாவாகும். இதே போன்று கருடசேவை, விஷுக்கனி சேவை ஆகியனவும் பஜனைப் பாடல்களுடன் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயத்திற்கு அருகிலேயே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சோடசி அம்மன் கோவில், சங்கீர்த்தனை மடம் ஆகியனவும் அமைந்துள்ளது. சங்கீர்த்தனை மடத்தின் வளாகத்தினுள் கண்ணனின் புகழ் பாடியவர்களின் உருவச்சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.