தேமுதிக வரும். கருணாநிதி.. இல்லை இல்லை வராது மு.க.ஸ்டாலின்
தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் தேமுதிக தங்கள் கூட்டணியில் இணையும் என்று திமுக தலைவர் நேற்று கூறியிருந்த நிலையில், இன்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், ‘தேமுதிகவுடன் கூட்டணி குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளது திமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிகவை இணைப்பதில் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டையே இது வெளிப்படுத்துவதாக திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கருதி வருகின்றனர்.
மேலும் இந்த தேர்தலில் கிங் ஆக இருப்பேன் என மார்தட்டி சொன்ன விஜயகாந்த் நிலைமைதான் தற்போது பரிதாபமாக உள்ளது. மக்கள் நலக்கூட்டணி தேமுதிகவின் தலைமையை ஏற்காது என்றும், அந்த கூட்டணிக்குத்தான் தேமுதிக வரவேண்டும் என்றும் முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தல் முடிந்தவுடன் தான் பேச வேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில் தற்போது திமுக கூட்டணியும் இல்லாமல், மக்கள் நலக்கூட்டணியும் இல்லாமல் பரிதாபமான நிலையில் உள்ளது.
தன்னுடைய தகுதிக்கு மீறி ஆசைப்பட்ட விஜயகாந்த்துக்கு இந்த தேர்தல் நல்ல படிப்பினை தரும் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.