புதுச்சேரியில் மதுவிலக்கு சாத்தியமில்லை. முதல்வர் ரங்கசாமி
தமிழகத்தில் மதுவிலக்கு பற்றி பேசும் எந்த கட்சியும் புதுச்சேரிக்கு பிரச்சாரம் செய்ய போகும்போது மதுவிலக்கு பற்றி எதுவுமே பேசுவதில்லை. அங்கு மதுவிலக்கு அமல்படுத்துவதாக கூறினால் நிச்சயம் தோல்விதான் கிடைக்கும் என அரசியல் கட்சிகள் புரிந்து வைத்துள்ளன. இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியில் மதுவிலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
2016 சட்டமன்றத் தேர்தலுக்காக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார்.
அதில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மத்திய திட்டக் குழுவிற்கு மாற்றாக அமைக்கப்பட்ட நிட்டி ஆயோக் (NITI AYOG)-ல் புதுச்சேரி முதலமைச்சரையும் நிரந்தர உறுப்பினராக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
செண்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படும் காமராஜர் கல்வி உதவி ஊக்கத் தொகை பொறியியல் மாணவர்களுக்கு ரூ.25,000-லிருந்து ரூ.40,000-ஆகவும், மருத்துவ மாணவர்களுக்கு ரூ.2.25 லட்சத்தை ரூ.4 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும். மாணவர்கள் கல்லூரிக் கல்விக்காக வங்கிகள் மூலம் பெற்ற கடன்கள் அனைத்தும் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்படும்.
அனைத்து குடும்பத்திற்கு தற்போது இலவசமாக வழங்கப்படும் பத்து கிலோ அரிசி இருபது கிலோவாக உயர்த்தப்படும். மீண்டும் இலவசமாக கோதுமை வழங்கப்படும்.
மருந்துகளின் விலை உயர்வினால் அவஸ்தைப்படுவதை தவிர்க்க, மருந்துகளை மலிவு விலையிலோ அல்லது அடக்க விலையிலோ விற்பதற்கு ‘மக்கள் மருந்தகங்கள்’ தொடங்கப்படும்.
விவசாயப் பயிர்க் கடன்களுக்கான வட்டி முழுவதையும் அரசே செலுத்தும் அல்லது தள்ளுபடி செய்யும்.
அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வாஷிங் மெஷின் போன்ற நவீன பயன்பாட்டுக் கருவிகள் வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் இலவச செட்-டாப் பாக்ஸ் வழங்கப்படும்.
காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை நான்கு லட்சத்திலிருந்து ஐந்து லட்சமாக உயர்த்தப்படும்.
நகரத்தின் முக்கிய இடங்களில் இலவச வைஃபை (Wi-Fi) வழங்கப்படும். இந்தச் சேவை கிராமப் புறங்களிலும் கிடைத்திட ஏற்பாடு செய்யப்படும்.
கிடப்பில் போடப்பட்டுள்ள திண்டிவனம்-புதுச்சேரி-கடலூர் பாதை, கிழக்குக் கடற்கரை ரயில் பாதை, காரைக்கால்-பேரளம் அகலப்பாதை, காக்கிநாடா-கோவை-நெல்லைக்கு நேரடி ரயில் சேவை ஆகிய திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்” என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டதும், புதுச்சேரியில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, பதில் அளித்த ரங்கசாமி, “பிரெஞ்சுக் கலாச்சாரத்தைத் தழுவி இருக்கும் புதுச்சேரி மாநிலம் மற்ற மாநிலத்தைவிட முழுக்க வேறுபட்டது. அதுமட்டுமல்லாமல் சிறிய மாநிலமான புதுச்சேரிக்கு மது மூலம்தான் வருமானம் கிடைக்கிறது. அதனால் பூரன மதுவிலக்கு என்ற பேச்சுக்கு புதுச்சேரியில் எப்போதுமே இல்லை” என்றார்.