டீசரின் வெற்றியால் தெறிக்க வைத்த ‘தெறி’ வியாபாரம்
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள ‘தெறி’ படத்தின் டீசர் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசர் வெளியாகி 33 மணி நேரம் முடிந்துள்ள நிலையில் 3 மில்லியன்களுக்கும் அதிகமான பார்வையாளர்களையும், 1,75,000 லைக்குகளையும் பெற்று வேறு எந்த தமிழ்ப்படமும் செய்யாத சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ரசிகர்களைபோலவே இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவும் பெரும் சந்தோஷத்தில் உள்ளார். ‘புலி’ தோல்வியால் ‘தெறி’ படத்தின் வியாபாரம் பாதிக்கும் என்ற வதந்தி பரவிய நிலையில், வதந்தியை தெறி டீசர் உடைத்தெறிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதை நிரூபிப்பதைப்போல் இந்த படத்தை இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகைக்கு விநியோகிஸ்தர்கள் வாங்குவதற்கு தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.
வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ள இந்த படம் வசூலிலும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், சமந்தா, எமிஜாக்சன், ராதிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜி.வி.பிக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.