ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். பைரவர் சிவனது அம்சம் ஆவார். பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள்.
–
படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தெழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.
–
சிதம்பரம் கனக சபையில் சொர்ண ஆகர்ஷண பைரவர் அருள்பாலிக்கிறார்.
–
“விரிந்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால பயிரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண் திருமணிவாய் விள்ளச்
சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.”
– (#திருநாவுக்கரசர்)
–
இந்த பாடலில் கால பயிரவரின் திருக்கோலம் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலை ஓதும் அடியார்கள், தங்கள் அச்சம், இடர், வறுமை, பிணி முதலியன நீங்கப்பெற்று, செல்வம் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்கள் என்று நம்பப்படுகின்றது.
–
பலவாறு விரிந்த ஒளியினை உடைய சூலத்தையும், ஓசையை உள்ளடக்கிய தமருகம் எனப்படும் உடுக்கையையும் கையில் ஏந்தி அழகிய வடிவம் கொண்ட கால பயிரவ மூர்த்தியாக கோலம் கொண்ட சிவபெருமான், தன்னை அழிப்பதற்காக தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானையினை அழித்தார்; யானை சிவபெருமானை நெருங்கியதையும், அதன் தோலினை சிவபெருமான் உரித்த பின்னர் அந்த தோலினைப் போர்வையாக உடலின் மீது போர்த்துக் கொண்டததையும் கண்ட பார்வதி தேவி மிகவும் அச்சம் எய்தினாள். தேவியின் பயத்தைக் கண்ட சிவபெருமான் தனது பவளம் போன்று ஒளி திகழும் வாய் மலர்ந்து சிரித்தார். இவ்வாறு சிறிதும் அஞ்சாமல் வீரச்செயல் புரிந்தவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார்.
ௐ||ௐ||ௐ ——— திருச்சிற்றம்பலம் ——— ௐ||ௐ||ௐ