திருச்செந்தூர் முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட வெயிலுகந்தம்மன் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆக.,31 ல் தேரோட்டம் நடக்கிறது. ஆண்டு தோறும் ஆவணி மாதம் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணி திருவிழா நடக்கும். இந்தாண்டு திருவிழா (ஆக.,22) அதிகாலை துவங்கியது. அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3 கணபதி ஹோமம். பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை நடந்தது. காலை 4 மணிக்கு கொடிப்பட்ட ஊர்வலம் நடந்தது. 5.20 மணிக்கு சுப்பிரமணிய வல்லவராயர் கொடியினை ஏற்றினார். கொடி மரத்திற்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. வண்ண மலர்களால் கொடி மரம் அலங்கரிக்கப்பட்டது. மகாதீபாரதனை நடந்தது. தினமும் திருவிழா காலங்களில் அம்மன் பல்வேறு கோலங்களில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். திருவிழாவின் 10 ம் நாளான ஆக., 31 ல் அதிகாலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை தக்கார் மணி கண்டன், இணை கமிஷனர் வரதராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.