நேர்மையான போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள் மகன் தினேஷ். டிகிரியை கூட முடிக்காமல் ஊர்சுற்றிக்கொண்டு வம்பை விலைக்கு வாங்கி வரும் ஊதாரி கேரக்டர். தனது மகனை எப்படியாவது ஒரு போலீஸ் அதிகாரியாக பார்க்க வேண்டும் என்பது ராஜேஷின் ஆசை.
இந்நிலையில் ஒருநாள் தினேஷுக்கு அசிஸ்டெண்ட் கமிஷனர் மகன் நிதின் சத்யாவுக்கும் நடந்த சண்டையில் நிதின் சத்யாவை தினேஷ் பயங்கரமாக அடித்து காயப்படுத்தி விடுகிறார். தனது மகனை அடித்த ஹெட் கான்ஸ்டபிள் மகனை பழிவாங்க ராஜேஷை தனக்கு தெரிந்த ரவுடியை வைத்து கொலை செய்து விடுகிறார் அசிஸ்டெண்ட் கமிஷனர்.
தந்தை இறந்ததால் தினேஷுக்கு போலீஸ் வேலை கிடைக்கின்றது. தந்தையின் மரணம் எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்கும் தினேஷ் போலீஸில் சேர்ந்த பிறகுதான் தனது தந்தை எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் தனது தந்தையை கொலை செய்த ரவுடியை சந்திக்கும் தினேஷ், தந்தையின் கொலைக்கு அசிஸ்டெண்ட் கமிஷனர்தான் காரணம் என்பதை அறிகிறார். தந்தையை கொலை செய்தவர்களை தினேஷ் எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் கதை.
விஜய்காந்த், சரத்குமார், அஜீத், போன்ற கம்பீரமான நடிகர்களுக்கு மிகப்பொருத்தமாக பொருந்திய போலீஸ் டிரஸ் தினேஷுக்கு சிறிதும் பொருந்தவில்லை. இருந்தாலும் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.
தினேஷுக்கு ஜோடியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் ஹீரோயின் என்ற கேரக்டர் இருப்பதை மட்டும் ஞாபகப்படுத்துகிறார்.
ரவுடியாக வரும் ராஜேந்திரன், கமிஷனராக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், ராஜேஷ், தினேஷின் நண்பனாக வரும் பாலா என அனைவரும் தங்களுக்கு கொடுத்த கேரக்டர்களை சரியாக செய்துள்ளார்கள்.
யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் தேறியுள்ளது. பின்னணி இசையில் யுவன் ரொம்ப ரிஸ்க் எடுக்கவில்லை என தெரிகிறது.
சிக்கலில்லாத கதை, தெளிவான ஹீரோயிசம் இல்லாத திரைக்கதை, எளிமையான காட்சி அமைப்புகள் என அனைத்தையும் நேர்த்தியாக செய்துள்ளார் கார்த்திக் ராஜு. பாராட்டுக்கள்.
மொத்தத்தில் திருடன் போலீஸ் ஒரு நிமிர வைக்கும் போலீஸ் கதை.