திருக்காமீஸ்வரர் கோவிலில் ரகசிய அறை கண்டுபிடிப்பு!

LRG_20150730122952812868

வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில், அன்னியர் படையெடுப்பு களில் இருந்து, சுவாமி சிலைகளை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்ட ரகசிய சுரங்க அறை கண்டுபிடிக்கப்பட்டது. புதுச்சேரி அடுத்த வில்லியனுாரில், தருமபரிபால சோழனால் கட்டப்பட்ட, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஆடிப்பூரத்தன்று, கோவில் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர் நேராக விழுவது தனிச்சிறப்பாகும். இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, 11 கோடியே 55 லட்சம் செலவில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவில் மூலவர் சன்னிதிக்கு பின்புறம், தென்மேற்கு திசையில் அமைந்துள்ள சோமாஸ்கந்தர் (உற்சவ அம்பாள் சுவாமி) சன்னிதியின் தரைத்தளம் பெயர்த்தெடுக்கப்பட்டு, கருங்கற்கள் பதிக்கும் பணி நேற்று நடந்தது. காலை, 9:00 மணியளவில், பணியாளர்கள், தரை யில் கற்களைப் பெயர்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு சுரங்கம் போன்ற அமைப்புடன் பள்ளம் தென்பட்டது.

தகவல் அறிந்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தில்லைவேல், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, எஸ்.பி., ரவிக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். சுரங்கம் போன்ற தென்பட்ட இடத்தில், கற்களை முழுவதுமாக வில்லியனுார் தீயணைப்பு படையினர் அகற்றினர். அங்கு, ஐந்து அடி ஆழத்தில், 10க்கு 8 அடி என்ற அகலத்தில் ரகசிய பாதுகாப்பு அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முழுவதுமாக கருங்கற்களை கொண்டு, உறுதி யாக அறை அமைக்கப்பட்டிருந்தது; உள்ளே எந்த பொருளும் இல்லை. மன்னர்கள் காலங்களில், அன்னியர் படையெடுப்புகளின் போது, சுவாமி சிலைகளை வைத்து பாதுகாக்க, இந்த ரகசிய பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு இருக்கலாம் என, கருதப்படுகிறது. கோவிலில் ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்ட தகவல் பரவியதால், ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர். இதனால், கோவில் வளாகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

Leave a Reply