திருக்கழுக்குன்றம், திரிபுரசுந்தரி அம்மனுக்கு, 40 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய மரத்தேர் செய்யும் பணி நடந்து வருகிறது. திருக்கழுக்குன்றத்தில், திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின், சித்திரை பிரம்மோற்சவத்தின், 7ம் நாளில், பஞ்சமூர்த்திகளுடனும், ஆடிப்பூர உற்சவத்தின், 7ம் நாளில், தனித்தும், திரிபுரசுந்தரி அம்மன், திருத்தேரில் உலா வருவார். அம்மன் திருத்தேர், சில ஆண்டு களுக்கு முன் பழுதாகி, பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது. கடந்த 2013, செப்டம்பரில், கும்பாபிஷேகம் நடந்த நிலையில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தேர் உருவாக்க, கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. இப்பணிக்கு, திருத்தேர் பணி நிதியாக, அரசு கடந்த ஆண்டு 10 லட்சம் ரூபாய் வழங்க, பக்தர்கள் நன்கொடையாக 30 லட்சம் ரூபாய் பெறப்படுகிறது. இத்தேர், தொண்டை மண்டல வடிவமைப்பின்படி, 32 அடி உயரம்; சதுர பீடம் (10 அடி நீளம், 10 அடி அகலம்); முருகர், விநாயகர், அம்மனின் பல்வேறு உருவங்கள் உட்பட, 32 சிற்பங்கள்; மர சக்கரங்கள் என, மூன்றடுக்கு மரத்தேராக உருவாக்கப்படுகிறது. இப்பணி, ஆறு மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டு நடந்து வருகிறது.