திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு பெருமாள் தெப்பக்குள மண்டபத்தில் குழந்தை கண்ணன் அலங்காரத்தில் எழுந்தருளினார். இக்கோயிலில் தெப்ப உற்சவம் 11 நாட்கள் நடைபெறும். கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் இரவில் திருவீதி புறப்பாடு நடக்கிறது. நேற்று காலை 7 மணிக்கு பெருமாள் கோயிலிலிருந்து தங்கப் பல்லக்கில் கையில் வெண்ணெய் குடத்துடன், தவழும் நிலையில் குழந்தை கிருஷ்ணர் வெண்ணெய் தாழி அலங்காரத்தில் திருவீதி புறப்பாடு துவங்கியது.
பகல் 12 மணிக்கு தெப்பக்குளக்கரை அருகே மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து குளத்தில் முட்டுத் தள்ளுதல் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு கோயிலிலிருந்து பெருமாள் புறப்பட்டு தெப்பக்குள மண்டபத்திற்கு வருகையும், பின்னர் தெப்பம் எழுந்தருளி, பகல் 11 மணிக்கு பகல் தெப்பம், இரவு 10 மணிக்கு மும்முறை தெப்பம் வலம் வருதல்நடைபெறும்.
விளக்கு வழிபாடு: திருக்கோஷ்டியூர் தெப்பக்குளம் அமைந்துள்ள தி.வைரவன்பட்டி குளக்கரையில் சில நாட்களாக தீபம் ஏற்றி பெண்கள் பெருமாளை வழிபட்டு வருகின்றனர். நேற்று குழந்தை கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் தோன்றியதால் குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பிரார்த்தனைகளுக்காக பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
பிரார்த்தனைக்காக ஏற்றப்பட்ட விளக்குகளில், தீபம் அணையும் வரை காத்திருந்து, இரண்டு விளக்குகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று, பூஜையறையில் வைத்து தினமும் விளக்கேற்றி பிரார்த்திப்பதும், பிரார்த்தனை நிறைவேறிய பின்னர், தங்களால் முடிந்த எண்ணிக்கையில் திருக்கோஷ்டியூர் தெப்பக்குளக்கரையில் விளக்கேற்றி பிரார்த்தனையை பூர்த்தி செய்வதும் இக்கோயிலில் பெண் பக்தர்களின் ஐதீகமாக உள்ளது