திருக்குறள் ஒவிய கண்காட்சி

தமிழர் பண்பாட்டை உலகறிய செய்வதற்காக, சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடத்தினையும், மதுரையில் சங்கத்தமிழ் காட்சிக்கூடத்தையும் அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இயல், இசை, நாடகம் என்ற மூன்று கலைகளையும் உள்ளடக்கிய இலக்கிய வளம் வாய்ந்த மொழி தமிழ் மொழியாகும். இத்தகைய தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கும் கொண்டு சென்ற நூல், உலகப்பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளாகும். தனி மனித ஒழுக்கம், குடும்ப அமைதி, அரசாட்சியின் மேன்மை, சமூக வாழ்வியல் போன்றவை குறித்த நல்ல அறிவுரைகள் இன்றைய உலக சமுதாயத்தின் உயர்வுக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாக அமைந்துள்ளது.

இத்தகைய சிறப்பு மிக்க நூலாகிய திருக்குறளில் உள்ள அரிய வாழ்வியல் கருத்துகளை எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் காட்சிப்படுத்துவது மிகவும் அவசியமாகும். எனவே சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிறந்த உட்கட்டமைப்புடன் கூடிய திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடத்தினை அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

திருக்குறள் ஓவியக்கூடத்தில், திருக்குறளை விளக்கும் ஓவியங்களைக் காட்சிப்படுத்தல், ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ள திருக்குறள் நூல்களை சேகரித்து காட்சிப்படுத்துதல் மற்றும் உரைநடை வடிவில் உள்ள திருக்குறள் நூல்களை சேகரித்துக் காட்சிப்படுத்துதல், திருக்குறள் தொடர்பான படக்காட்சிகள், குறும்படங்கள் மற்றும் உயிரூட்டுப் படங்கள் சேகரித்து காண்பித்தல், அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்களைக்கொண்டு திருக்குறள் கூறும் அறநெறிக் கருத்துகளை நிகழ்கால ஓவியங்களாக தீட்டப்படுதல், பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள் நூல்களை சேகரித்து காட்சிப்படுத்துதல் மற்றும் வட்டெழுத்து மற்றும் கல்லெழுத்தில் உள்ள திருக்குறளை சேகரித்துக் காட்சிப்படுத்துதல் ஆகியன செயல்படுத்தப்படும்.

உலகமெல்லாம் பரவி வாழ்ந்து கொண்டிருக்கின்ற புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பண்பாட்டு வேர்களை ஒருங்கிணைக்கவும், அவர்கள் நேரில் கண்டு கேட்டு இன்புறுவதற்கும், இலக்கியம் சார்ந்த பண்பாட்டு பயணம் மேற்கொள்கையில் அனைத்துத் தகவல்களும் ஒருங்கே கிடைக்கவும், ஒரு மையம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பான கட்டமைப்பு மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய உலகத் தமிழ் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம் ஒன்றினை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் மொழியின் சிறப்பையும், இலக்கண வளத்தையும் வெளி உலகிற்கு உணர்த்திய ஒரு அரிய நூல் தொல்காப்பியமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தொல்காப்பியத்திற்கு பல அறிஞர்கள் விளக்க உரைகள் எழுதியுள்ளனர். ஆனால், இவ்வுரைகள் அனைத்தும் ஒருங்கே கிடைக்காமல் அங்காங்கே சிதறி உள்ளது. தொல்காப்பியத்திற்காக வெளிவந்துள்ள அனைத்து உரைகளையும் கண்டெடுத்து, அவற்றை முறைப்படுத்துதல், தொல்காப்பியத்தில் இதுவரை வந்துள்ள மொழிப்பெயர்ப்புகளை ஒருங்கிணைத்து முறைப்படுத்துதல், இந்நூலை பிறமொழி இலக்கண நூல்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தல், தொல்காப்பியம் விளம்பும் வாழ்வியல் இலக்கணங்களை இன்றைய மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தல், மாணவர்கள் தொல்காப்பியம் நூலைக் கற்க ஊக்கப்படுத்தல் போன்ற எண்ணற்ற பணிகளை ஆற்றுவதற்காக தொல்காப்பியர் பெயரால் ஒரு தனி இருக்கை ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

எனவே, தமிழர் தம் வாழ்க்கை வளத்தை எடுத்துக்கூறும் தொல்காப்பியத்தினை நினைவுகூறும் வகையில், தொல்காப்பியர் ஆய்விருக்கை ஒன்றினை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்படுத்தவும், இதற்கென ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தொல்காப்பியர் ஆய்வு இருக்கையின் வாயிலாக 6 திங்களுக்கு ஒருமுறை இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம், ஓராண்டுக்கு ஒரு முறை பன்னாட்டு கருத்தரங்கம் நடத்தப்படும். மேலும் ஆண்டுக்கொரு முறை தொல்காப்பிய இலக்கணம் குறித்து மாணவர்களுக்கு 10 நாட்கள் புத்தொளிப் பயிற்சி அளிக்கப்படும்.

பண்டைத் தமிழரின் பெருமைகளையும், சிறப்புகளையும் இன்றைய தலைமுறையினர் கண்டு பெருமைக் கொள்ளும் வகையில், சங்கத்தமிழ் பாடல்களை ஓவியங்களாகவும், காணொலிக் காட்சிகளாகவும் அசைவுப் படங்களாகவும், எழிலார்ந்த சிற்பங்களாகவும் காட்சிப்படுத்தும் வகையில் நிரந்தர சங்கத்தமிழ் காட்சிக்கூடம் ஒன்று ரூ.75 லட்சம் செலவில் மதுரையில் அரசு அருங்காட்சியகத்திற்கு எதிரில் 58 சென்ட் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் அமைக்கப்படும். இந்த கூடத்தில், முதற்கட்டமாக பண்டைத் தமிழரின் பெருமைகளையும், சிறப்புகளையும் காட்சிப்படுத்தும் விதமாக, அருங்காட்சியக முகப்பு சுவர்களில் ஓவியங்கள், காட்சிக்கூடத்திற்குள் ஓவியங்கள், புடைப்புச்சிற்பங்கள், புகைப்படங்கள் ஆகியவை அமைக்கப்படும்.

சங்கத் தமிழ்க் காட்சிக்கூடத்தில் எந்தெந்த இலக்கியக் காட்சிகளை ஓவியங்களாகவும், புடைப்பு சிற்பங்களாகவும், சிற்பக் காட்சிகளாகவும், புகைப்படங்களாகவும் அமைக்கலாம் என்பதை தெரிவு செய்திடவும், உருவாக்கியதை ஏற்பளிக்கவும் அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை தலைமையில் ஒரு குழு அமைப்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கைகள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழர் பண்பாட்டினை உலகறியச்செய்வதற்கும் வழிவகை ஏற்படுத்தும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply