சென்னையிலிருந்து கோவைக்கு முஸ்லீம் பெயரில் திருட்டுத்தனமாக ரயிலில் பயணம் செல்லும் இந்து மதத்தை சேர்ந்த ஜெய், அதேபோல முஸ்லீம் பெண் பெயரில் பயணம் செய்யும் இந்து மதத்தை சேர்ந்த நஸ்ரியா, இருவரும் ரயிலில் சந்தித்து ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். இதனால் விளையும் குழப்பங்களை குழப்பமான திரைக்கதையுடன் கூறியுள்ளார் இயக்குனர்அனீஸ்.
ரயிலில் முதல் சந்திப்பிலேயே காதல் கொள்ளும் ஜெய்- நஸ்ரியா, இருவருமே தங்கள் காதல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தங்களை முஸ்லீம் என்று காட்டிக்கொள்ள படும் பாட்டை மிகவும் ரசிக்கத்தக்க வகையில் படமாக்கப்பட்டுள்ளது. எங்கே தான் இந்து என்று தெரிந்துவிட்டால் காதல் கைகூடாமல் போய்விடுமோ என்பதற்காக ஜெய், ஒரு முஸ்லீம் நண்பரின் வீட்டிற்கு சென்று முஸ்லீம்களின் பழக்கவழக்கத்தை தெரிந்து கொள்கிறார். ஆனால் அந்த வீட்டில் உள்ள ஒரு முஸ்லீம் பெண், ஜெய்யை காதலிக்க, கதை முக்கோண காதலை நோக்கி பயணிக்கிறது.
இந்நிலையில் ஜெய் மற்றும் நஸ்ரியா முஸ்லீம்கள் இல்லை, இந்து என்று தெரியவருகிறது. அதன்பின்னர் என்ன செய்வது, எப்படி கதையை நகர்த்துவது என்று தெரியாமல் இயக்குனரும் குழம்பி, நம்மையும் குழப்பி இரண்டாவது பாதியை முக்கோண காதல் கதையாக படுசொதப்பலாக கொடுத்துள்ளார். இறுதியில் ஜெய் – நஸ்ரியா சேர்ந்தார்களா? என்பதையும் ஒரு சுமாரான க்ளைமாக்ஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
முஸ்லீம் காதலை மிக அருமையாக சொல்ல வருகிறார் இயக்குனர் என நிமிர்ந்து உட்காரும்போதே இயக்குனரின் சறுக்கல் ஆரம்பமாகிவிடுகிறது. முதல் ஒருமணி நேரம் விறுவிறுப்பாக சென்ற திரைக்கதை பின்னர் சொல்ல வந்ததை சொல்லாமல் தடம் மாறுவதால் படம் சப்பென்று முடிந்துவிடுகிறது.
ஜெய்க்கு எந்த வேடம் கொடுத்தாலும் நிறைவாக செய்வார் என்பதை இந்த படத்திலும் நிரூபித்துள்ளார். உண்மையிலேயே முஸ்லீமாக மாறிய ஜெய், இந்த படத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். இவரை சொல்லி குற்றமில்லை.
நேரம், நையாண்டி ஆகிய இரண்டு படங்கள் இதற்கு முன் ரிலீஸ் ஆனாலும், நஸ்ரியா ஒப்புக்கொண்ட முதல் தமிழ்ப்படம் இதுதான். ரொம்ப நாட்களாக கிடப்பில் போட்டு வெளிவந்துள்ள படம். நஸ்ரியாவின் நடிப்பை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் இந்த படத்தில் நஸ்ரியா கொள்ளை அழகு என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஜிப்ரானின் இசையில், பாடல்கள் ரொம்ப சுமார்தான். பின்னணி இசையும் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை. நஸ்ரியாவின் அழகை மிகவும் அழகாக படம்பிடித்த ஒளிப்பதிவாளர் லோகநாதனுக்கு பாராட்டுக்கள். இரண்டாவது பாதியின் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக வந்திருக்க வேண்டிய படம். நஸ்ரியாவுக்காக ஒருமுறை பார்க்கலாம்.