திருமணத் தடை நீக்கும் பகவதி அம்மன்

Amman (36)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில், இலுப்பைப் பூமாலையை ஒரு திருக்கரத்தில் தரித்து, மற்றொரு திருக்கரத்தைத் தொடை மீது வைத்துத் தவக்கோல நாயகியாகத் காட்சி அருள்கின்றாள். இவ்வன்னையின் திருமுடி மீது விளங்கும் கிரீடத்தில் பிறைமதி ஒளிர்கின்றது.

இவ்வன்னை அணிந்திருக்கும் அணிகளுள் வைரமூக்குத்தி மிகவும் பேரொளி வீசுகின்றது. அழகின் அற்புத உருவாக அன்னை விளங்குகின்றாள்.  கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். காசிக்கு போகிறவர்களுக்கு கதி கிடைக்க வேண்டுமாயின் இக்கன்னியாகுமரிக்கு வரவேண்டுமென்று நம் புராணம் முறையிடுகிறது.

இது சிறந்த தீர்த்தத் துறையையுடைய புண்ணிய கடற்கரையாகும் என்பதால் இங்கு நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும்.  அம்மனுக்கு விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்தி கடன்களாக செய்கின்றனர்.

இங்குள்ள கடற்கரையில் பக்தர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு காரியம் செய்ய எள்ளும் தண்ணீரும் இறைத்து பிதுர்கடன் செய்கிறார்கள்.     கன்னியாகுமரியில் கன்னியாய் அமர்ந்திருக்கும் இந்த தேவி பகவதி அம்மனிடம் தங்கள் குறைகள் நீங்கி நன்மை விளைய எண்ணுவோர், பூச்சொரிதல் நடத்தினால், அவர்கள் வேண்டிய வரங்கள் எளிதில் நடைபெறும் என்பது நம்பிக்கை.

குமரி பகவதியிடம் வேண்டியவை அனைத்தும் கிடைக்கும். பகவதி இன்றும் ஈசனை வேண்டி, உலகம் உய்ய தவம் செய்வதாக கூறப்படுகிறது. எனவே தேவியிடம் நாம் வேண்டும் அனைத்தும், ஈசனிடம் கொண்டு சேர்க்கப்படும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாகும். குமரி பகவதியின் விக்கிரகத்தின் மேல் பகுதி சொரசொரப்பாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த அமைப்பை ருத்ராட்ச விக்கிரகம் என்று அழைக்கிறார்கள். அம்மன் சன்னிதி முன்பு `வாடா விளக்கு’ ஒளிர்ந்து கொண்டே இருக்கும். இந்த விளக்கில் தொடர்ச்சியாக 9 வெள்ளிக் கிழமைகள் நெய் சேர்த்து வந்தால் பொன், பொருள், நிலம் வாங்கும் யோகம் அமையும்.

அதே போல் 9 செவ்வாய்க்கிழமை சந்தனாதி தைலம் சேர்த்து வந்தால் திருமணத் தடை அகலும். சந்தான பாக்கியம் கிட்டும். தொடர்ச்சியாக 9 புதன் கிழமைகள் நல்லெண்ணெய் சேர்த்து வந்தால் கடும் பிணிகளும் அகலும்.

Leave a Reply