திருமாவளவன் கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்க மாட்டார். வைகோ கருத்து
நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். எனவே இந்த தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அவர் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அவருடைய கோரிக்கையை தேர்தல் ஆணையர் நிராகரித்ததோடு நீதிமன்றம் செல்லுமாறு அறிவுறுத்தியது.
இதுகுறித்து மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறும்போது, “தொல்.திருமாவளவன் போட்டியிட்ட தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது பயனளிக்காது. இதுபோன்று நீதிமன்றத்திற்கு போன வழக்குகளில் 4½ ஆண்டுகளுக்கு பிறகு, அடுத்த தேர்தலின் போதுதான் தீர்ப்புகள் வந்துள்ளன” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த தேர்தலின் முடிவை பணம் மட்டுமே தீர்மானித்ததாகவும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத பேரவலமாக இந்த தேர்தலில் திட்டமிட்ட வகையில் வீடுதோறும் சென்று வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை தடுக்க தவறிய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.