ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திவ்யதேஸங்களிலும், புராண மற்றும் பழமை வாய்ந்த ஸ்தலங்களிலும் நடக்கும் உற்சவங்களில், மிகவும் சிறப்பானது, கருட ஸேவை உற்சவமே. ஸ்ரீமந்.நாராயணனாகிய எம்பெருமானை கருட ஸேவையில் ஸேவிப்பது என்பது, எல்லோருக்கும் ஒரு கிடைத்தற்கறிய பாக்கியமாகும். இப்படி நடக்கும் கருட ஸேவை உற்சவங்களில், மிக முக்கியமானது திருநாங்கூரில் நடக்கும் பதினோரு கருட ஸேவை உற்சவமும், ஆழ்வார் திருநகரியிலே நடக்கும் ஒன்பது கருட ஸேவை உற்சவமும், ஸ்ரீ.வில்லிபுத்தூரிலே நடக்கும் ஐந்து கருட ஸேவை உற்சவமும் மிக சிறப்பு வாய்ந்தது. இதிலே பல திருக்கோயிகளில் இருந்து எழுந்தருளும் எம்பெருமான்கள் , கருட ஸேவையில் ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஒரு சேர காட்சி அருளுவதென்பது எப்படிப்பட்ட சிறப்புவாய்ந்ததாக இருக்கும்?
இந்த சிறப்பு மிக உற்சவங்களில் ஒன்றான திருநாங்கூர் ,பதினோரு கருட ஸேவை உற்சவம், இந்த தை மாதம் 26 ஆம் நாள் ( பிப்ரவரி 9 ஆம் தேதி ) நடைபெற இருக்கிறது. அங்கு எழுந்தருளியுள்ள பதினோரு திவ்ய தேஸ எம்பெருமான்களும், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றவர்கள். அந்த திவ்ய தேஸ எம்பெருமான்கள் :-
ஸ்ரீ.நாராயணப் பெருமாள், திருமணிமாடக் கோயில்
ஸ்ரீ.குடமாடுகூத்தர், அரிமேய விண்ணகரம்
ஸ்ரீ.செம்பொன் அரங்கர், செம்பொன்செய் கோயில்
ஸ்ரீ.பள்ளிகொண்ட பெருமாள், திருத்தெற்றியமபலம்
ஸ்ரீ.அண்ணன் பெருமாள், திருவெள்ளக்குளம்
ஸ்ரீ.புருஷோத்தம பெருமாள், திருவண்புருடோத்தமம்
ஸ்ரீ.வரதராஜப் பெருமாள், திருமணிக்கூடம்
ஸ்ரீ.வைகுந்தநாதப் பெருமாள், வைகுந்தவிண்ணகரம்
ஸ்ரீ.மாதவப் பெருமாள், திருத்தேவனார்தொகை ( கீழச் சாலை )
ஸ்ரீ.பார்த்தசாரதிப் பெருமாள், திருப்பார்த்தன்பள்ளி
ஸ்ரீ.கண்ணன் பெருமாள், திருக்காவளம்பாடி
திருநகரி திவ்யதேஸத்திலே எழுந்தருளியுள்ள ஸ்ரீ,திருமங்கை ஆழ்வார், ஸ்ரீ.குமுதவல்லி நாச்சியாருடன் , முதலில் மஞ்சக்குளி மண்டபத்திற்கு , முதல் நாள் ( 08.02.16) அன்று எழுந்தருளி, அங்குள்ள மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளுவார். பிறகு அங்கிருந்து, திருநாங்கூருக்கு, எழுந்தருளி, மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு திவ்ய தேஸங்களுக்கும் நேரில் ( திருவெள்ளக்குளம், திருத்தேனார்தொகை தவிர்த்து – இவ்விரண்டு திருக்கோயில்களிலும் கருட ஸேவை முடிந்து திருநகரி, திரும்புகாலில் மங்களாஸாஸனம் செய்வார் ) எழுந்தருளி, அங்குள்ள எம்பெருமானை மங்களாஸாஸனம் கண்டருளுவார். பிறகு மணிமாடக் கோயில் ஸ்ரீ.நாராயணப் பெருமாள் திருக்கோயிலை வந்தடைவார்.
மறுநாள் காலை , எல்லா திவ்ய தேஸ எம்பெருமான்களும் , புறப்பாடு கண்டருளி, மணிமாடக் கோயிலுக்கு வெளிபுறப் பந்தலில் எழுந்தருளுவார்கள். மதியத்திற்கு மேலே மணிமாடக் கோயில் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய பந்தலில் ஒவ்வொரு எம்பெருமானும் எழுந்தருள, அவர்களை, ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் , அங்கு மங்களாஸாஸனம் கண்டருளி, அந்த எம்பெருமானை ப்ரதக்ஷிணமாக வலம் வருவார். மங்களாஸாஸன்ம் முடிந்த பின் ஒவ்வொரு எம்பெருமானும், ஸ்ரீ.நாராயனப் பெருமாள் திருக்கோயிலுக்குள் எழுந்தருளுவார்கள்.
வண்புருடோத்தமப் பெருமாள் கோயிலிலிருந்து, ஸ்வாமி ஸ்ரீ.மணவாள மாமுனிகளும், மணிமாடக் கோயிலுக்கு எழுந்தருளுவார். அங்கு ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் , எம்பெருமான் களை மங்களாஸாஸனம் செய்த பிறகு, ஸ்ரீ.மணவாள மாமுனிகள் , திருமங்கை ஆழ்வாரை ப்ரதக்ஷிணம் வந்து, ஆழ்வாரை மங்களாஸாஸனம் செய்வித்து, அவரின் நாள் பாட்டு மற்றும் வடிவழகை பாசுரமாக அனுசந்திப்பார். பிறகு மணிமாட திருக்கோயிலில் எல்லா எம்பெருமான்களும் , ஆழ்வாரும் , ஆச்சாரியரும் திருமஞ்சனம் கண்டருளுவர்.
பிறகு எல்லா எம்பெருமான்களும் கருட வாஹனத்திலும், திருமங்கை ஆழ்வார், குமுதவல்லி நாச்சியாருடன் ஹம்ச வாஹனத்திலும், ஸ்ரீ.மணவாள மாமுனிகளும் வீதி புறப்பாடு கண்டருளுவர். அற்புதமான இந்த ஸேவையை நாம் கண்டு, இன்புற கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
கருட ஸேவை உற்சவம் முடிந்த பிறகு, எல்லா எம்பெருமான் களும் , அவர்களின் திருக்கோயிலுக்கு எழுந்தருளுவர். கருட ஸேவைக்கு அடுத்த நாள், திருநகரிக்கு திரும்பும் ஸ்ரீ.திருமங்கை ஆழ்வாருடன், திருவாலி, திருநகரி எம்பெருமான்கள் கருட ஸேவை கண்டருளுவர்.
ஆக இந்த சிறப்பான மூன்று நாள் உற்சவத்தை காண்பதென்பது நமக்கு பெரும் பாக்கியமே.
அடியேன் இதுவரை ஒருமுறை மட்டுமே ( 2014 ஆம் ஆண்டு ) இந்த உற்சவத்தினை ஸேவிக்கும் பாக்கியம் பெற்றுள்ளேன். அப்பொழுது ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் , எம்பெருமான்களை மங்களாஸாஸனம் செய்த பொழுது எடுத்த சில புகைப்படங்களை இங்கே பதிவிடுகின்றேன்.
அடியேன் இங்கு பதிவிட்டுள்ள சில விவரங்கள், கோயில் ஆத்தான் ஸ்ரீ.கஸ்தூரிரங்கன் ஸ்வாமி அவர்களின் பதிவிலிருந்து குறிப்பெடுத்துக் கொண்டுள்ளேன். அவருக்கு அடியேனது நன்றி