திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை
கல்பம்
அணுகல்பம்
உபகல்பம்
அகல்பம்
கல்பம்:
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும். பஞ்ச பிரம்ம மந்திரங்களை தக்க குரு மூலம் அறிந்து கொள்ளவும். வைத்தீஸ்வரன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரத்தின் அன்று இந்த கல்ப விபூதி விற்பனைக்குக் கிடைக்கிறது என்ற தகவலை இந்த கட்டுரை எழுதும் போது ஒரு நண்பர் இந்த தகவலைச் சொன்னார்.
அணுகல்பம்
காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.
உபகல்பம்
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.
அகல்பம்
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.
இதில் கல்பம் என்று சொல்லப்படும் வகையான விபூதியே மிகச்சிறப்பான அருள் சாதனமாக கருதப்படுகிறது. சாதாரணமாக கடையில் விற்கப்படும் விபூதி அகல்பமாகக்கூட இருக்கலாம். வியாபர நோக்கில் எருமை போன்ற விலங்குகளின் சாணமும் விபூதி தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த விபூதியை மந்தரித்து கொடுத்தால் எந்த நற்பலனையும் உபாசகர்கள் எதிர்பார்க்க முடியாது. எனவே நீங்களே கல்ப விபூதியை தயார் செய்வதே சிறப்பு என்பது எனது கருத்தாகும். பொதுவாக விபூதியில் வேறு எந்தப் பொருளும் கலக்காமல் இருப்பதே நல்லது. நல்ல ஒரு மஹானால் தொடப்பட்ட விபூதி எந்த ஒரு நறுமணமும் கலக்காமலே மிகச் சிறப்பான வாசனையைத் தருவதை நாங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம்.சில சித்தர்கள் அரிய வகையான மூலிகைகளை விபூதியில் கலந்தும் பயன்படுத்தி பல காரியங்களைச் சாதித்துள்ளார்கள். அவற்றையும் குரு மூலம் தெரிந்து கொள்வதே சிறப்பான முறையாகும்.
விபூதியை ஐஸ்வர்யம் என்று சொல்வர். செல்வத்தை அளிப்பது விபூதி! நம்மை எல்லாம் காத்து ரட்சிப்பதால், “ரட்சை’ என்ற பெயரும் விபூதிக்கு உண்டு. விபூதியில் உயர்வானது, “அக்னி ஹோத்ரம்’ செய்து கிடைக்கும் விபூதி. இது அக்னிஹோத்ரிகளிடம் கிடைக்கும். அதற்கடுத்து, பசுஞ் சாணத்தால் வரட்டி தட்டி, பசு மாட்டின் கோமியத்தால், “விரஜா’ ஹோமம் செய்து, வீட்டிலேயே மந்திரத்துடன் தயாரிக்கப்படும் விபூதி உயர்ந்தது.
புருவத்தின் நடுவில் ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக ஜோதி தெரிவதை யோகியர்கள், சித்தர்கள், மஹான்கள், முனிவர்கள், ரிஷிகள் கண்டு சொல்லி உள்ளார்கள். அவ்விடத்தில் தியானம் கைகூடி ஜோதி தெரிய வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர். மந்திர உருப்பெற்ற விபூதி ஒருவரின் ஆத்ம ஜோதியைத் தரிசிக்க வைக்கும். இதுவும் ஒரு வகையான தீட்சை ஆகும்.
இறைவன் படைப்பில் நமது மனித உடல் ஒரு கோவிலாகும். அதில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படவும் அதே சமயம், உள்ளிழுக்கவும் செய்யும். ஏதெனும் ஒரு பொருளை புருவ மத்தியின் அருகே கொண்டு வர ஒருவித ஈர்ப்பு தோன்றுவதை நாம் அனுபவப்பூர்வமாக உணர முடியும்.
புருவ மத்தியில் விபூதியை வைத்து சூரிய நமஸ்காரம் செய்தால் சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை விபூதி சரியாகச் செய்கிறது. அதை அப்படியே கண்களை மூடி தியானம் செய்ய உள் ஒளி பிரகாசமாகத் தெரியும். உபாசகர்கள் சூரிய நமஸ்காரத்தை தினசரி செய்வது மிக மிக அவசியம். குறிப்பாக ஜோதிடர்கள் உபாசனை இல்லாமல் ஜோதிடம் சொன்னால் மற்றவர்களது கர்ம வினை அவர்களைப் பாதிக்கும். எனவே உபாசனை என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும்.
நமது கண்களுக்கு ஏராளமான சக்திகள் உண்டு. அதைவிடப் பார்வைக்கு அதிக சக்தி ஊண்டு. மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றில் பார்வையும், எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண் திருஷ்டி என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதைத் தடுக்கவும் திருநீறு பயன்படும்.எனவேதான் விபூதியைக் காப்பு என்று சொல்கிறோம்.
புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரம் உள்ளது. பிட்யூட்ரி சுரப்பியைத் தூண்டச்செய்யும் இடமும் இந்த நெற்றி ஆகும் அந்த ஆக்ஞா சக்கரத்தைத் தியானம் செய்பவர்களுக்கு உடல் வெப்பம் அதிகரிக்கும். அந்த சூடு தணிய சந்தனம் பூசுவதும் வழக்கத்தில் உள்ளது..
விபூதி எல்லா வகையான தோசங்களையும் நீக்கும் தன்மை உடையது. சைவர்கள் விரும்பி அணியும் விபூதி எல்லா மதத்தினர்க்கும் நன்மை பயக்ககூடியது.அருள் மிக்க விபூதியை பின்வரும் விதிப்படி அணிவது சிறப்பானது.
வடதிசை அல்லது கிழக்கு திசையை நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். முருக உபாசகர்கள் ஆறுமுகம்… ஆறுமுகம்… என்று ஆறு முறை கூறி அணிவது சிறப்பு. இதை அருணகிரினாதர் தமது திருப்புகழிழ் சொல்லி உள்ளார். அதை வரியார் சுவாமிகள் அடிக்கடி வலியுருத்திக் கூறியுள்ளார். நெற்றி முழுவதும் அல்லது மூன்று கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை “உத்தூளனம்” எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை “திரிபுண்டரம்” எனப்படும்.
மேல் கோடு சாம வேதம், நடுவில் உள்ளது யஜுர் வேதம், கீழே உள்ளது அதர்வண வேதம் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது
ராஜ சின்னம் அணிந்தவனை எப்படி அரசன், “இவன் நம்மைச் சார்ந்தவன்’ என்று தெரிந்து கொள்கிறானோ, அதே போல, விபூதி அணிந்தவனை சிவனும், திருமண் அணிந்தவனை விஷ்ணுவும், மஞ்சள் பூசி, குங்குமம் அணிந்த பெண்ணை மகாலட்சுமியும் இவர் நம்மைச் சேர்ந்தவர் என்று எண்ணி அனுக்ரகம் செய்கின்றனர்