நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தனது வேல்மூலம் பாறையை கீறி, கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கியதாக ஐதீகம்.இதை நினைவு கூறும் வகையிலும், மழை வேண்டியும் மூலவர் கரத்திலுள்ள வேல், மலைமேல் கொண்டு செல்லும் விழா நடந்தது. நேற்று காலை பல்லக்கில் மலைமேல் கொண்டு செல்லப்பட்டு, சுப்பிரமணியர் கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.அங்கு காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பஞ்சலிங்கம், நந்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவருக்கு பூஜை நடந்தது. பின், சிவாச்சாரியார்கள் ரமேஷ், செல்லப்பா, வேலை, சுனை தீர்த்தத்தில் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்தனர். கிராமத்தினர் சார்பில், 150 படி அரிசியிலான கதம்ப சாத பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் வேல் புறப்பாடாகி, மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழநி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, இரவு அபிஷேகம் முடிந்து மூலவர் கரத்தில் மீண்டும் சேர்ப்பிக்கப்பட்டது.