திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த, தை மாத கிருத்திகை விழாவில், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று, தை மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை 4:45 மணிக்கு, மூலவருக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு அபிஷேக பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தங்க கிரீடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவருக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி, ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் தமிழகம், ஆந்திரா உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.