திருத்தணி கோவிலில் ஆர்ஜித சேவைகள் ஆன்லைன் மூலம் பதிவு

55598454

திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் தங்கும் விடுதி களை தொடர்ந்து, தற்போது, ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ஆன்லைன் (இணையம்) மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மூலவர் மற்றும் உற்சவருக்கு ஆர்ஜித சேவைகளை உரிய கட்டணம் செலுத்தி செய்து வருகின்றனர்.கடந்த மாதம் வரை சேவைகள் செய்ய பக்தர்கள் நேரில் வந்து சேவைக்கு ஏற்ற வாறு முன்கூட்டியே பணம் செலுத்தி வந்தனர். பக்தர்கள் வசதிக்காக, கடந்த ஒன்றாம் தேதி முதல், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை கோவில் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பஞ்சாமிர்தம், சந்தனக் காப்பு, கல்யாண உற்சவம் உட்பட, ஒன்பது வகையான சேவைகளுக்கு இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தலாம். மேற்கண்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகள், 24 மணி நேரத்திற்கு முன்னதாக, www.tirutanigaimurugan.tnhrce.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம். இதுகுறித்து, கோவில் இணை ஆணையர் புகழேந்தி கூறுகையில், மூன்று மாதங்களாக தேவஸ்தான விடுதிகளில் பக்தர்கள் தங்குவதற்கு இணைய தளம் மூலம் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இம்மாதம் முதல், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளும் இனி ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply