[carousel ids=”67773,67774,67775,67776,67777,67778,67779,67780,67781,67782,67783,67784,67785,67786,67787,67788,67789,67790″]
திருவல்லிக்கேணி என்றாலே, இங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான்களின் பல உற்சவங்கள் ஆண்டு தோறும் நடப்பவை நம் கண் முன்னே வந்து நின்று நம்மை குதூகலமடையச் செய்யும்.. அவ்வளவு சிறப்பான உற்சவங்கள், திருவரங்கன் குடிகொண்டிருக்கும் திருவரங்கத்துக்கு அடுத்து இங்குதான் நடைபெருகின்றன என்றால் அது உண்மையிலேயே மிகையில்லை.
அதிலும் குறிப்பாக ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமிக்கும், ஸ்ரீ.அழகியசிங்கனாகிய ஸ்ரீ.தெள்ளியஸிங்கருக்கும் நடக்கும் ப்ரம்மோற்சவங்கள் சிறப்பான பல உறசவங்களில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். அப்படி சிறப்புப் பெற்ற ஸ்ரீ.தெள்ளியசிங்கரின் ஆனி ப்ரம்மோற்சவம் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் ( ஜூலை ஐந்தாம் தேதி )நிறைவு பெற்றது.
ஒவ்வொரு நாளும் மிகவும் அருமை. இதில் எந்த நாளை சிறப்பென்று சொல்வது ? எல்லா நாளுமே சிறப்புதான். தினசரி காலை 6.00 மணிக்கு புறப்பாடு. மாலை 5.00 மணிக்கு மேல் திருக்கோவிலுக்குள் ஊஞ்சல் கண்டருளி, நடை பாவாடையில் எழுந்தருளி பின் 36 கால் மண்டபத்தில் பத்தி உலாத்தல் கண்டருளி, வாஹன மண்டபத்திற்கு எழுந்தருளுவார். இரவு 8.00 மணிக்கு மீண்டும் வாஹனத்தில் புறப்பாடு. நான்கு மாட வீதிகள் , நான்கு குளக்கரை வீதிகள் உட்பட எட்டு வீதிகளிலும் புறப்பாடு கண்டருளுவார்.
முதல் நாள் (26.06.15) கொடியேற்றத்துடன் தொடங்கிய உற்சவத்தன்று காலை பெருமாள் தர்மாதி பீடத்தில் புறப்பாடு கண்டருளினார். காலை முதல் திருவந்தாதி அருளிச் செயல் கோஷ்டி. இரவு புன்னை மர வாஹனத்தில் புறப்பாடு. இரவு பெரியாழ்வார் திருமொழி கோஷ்டி.
இரண்டாம் நாள் காலை சேஷ வாஹனத்தில், பரமபதனாதனாக எழுந்தருளினார். அன்று இரண்டாம் திருவந்தாதி அருளிச் செயல் கோஷ்டி. இரண்டாம் நாள் இரவு சிம்ம வாஹனம். சிம்மவாஹனத்தன்று தான் பெருமாள் பத்திஉலாத்தல் முடிந்து, வாஹன மண்டபம் எழுந்தருளி, சாற்றுபடி முடிந்து, பெருமாள் வீதி புறப்பாட்டிற்கு எழுந்தருளவும், சிறிய அளவில் மழை பெய்யத் தொடங்கி விட்டது. அதன் காரணமாக பெருமாள், வாஹன மண்டபத்தில் இருந்து எழுந்தருளி, ஆண்டாள் நீராட்ட மண்டபம் சுற்றி வந்து, பிறகு 36 கால் மண்டபம் வழியாக மீண்டும் வாஹன மண்டபம் அடைந்தார். பின் வாஹனத்திலிருந்து , தோளுக்கினியானில் எல்லா மாட வீதிகளிலும் எழுந்தருளினார். அடியோங்கள் வீதிகளில் அன்று வாஹனத்தில் புறப்பாடு கண்டருளாதது சிறிது மன வருத்தத்தை அளித்தது. ஆனால் தோளுக்கினியானில் எம்பெருமானை மிக அருகில் ஸேவிக்க கிடைக்கப் பெற்றதும் ஒரு பெரும் பாக்கியமே. அன்று இரவும் பெரியாழ்வார் திருமொழி கோஷ்டியே தொடர்ந்து, சாற்றுமுறையுடன் முடிவடைந்தது..
மூன்றாம் நாள் காலை ஸ்ரீ.தெள்ளியஸிங்கர், அவருடைய பெரிய திருவடியான கருட வாஹனத்தில் புறப்பாடு. பொதுவாக எந்த எம்பெருமானையும் கருட வாஹனத்தில் ஸேவிப்பது என்பது பெரும் பாக்கியமே. அதனிலும் கூடாக அன்று ஏகாதசி ஆதலால், விடியற்காலை கோபுர வாசலில் எம்பெருமானை ஸேவிப்பதென்பது கிடைத்ததிலும், கிடைத்தற்கரிய பாக்கியமே. பெருமாள் துளசிங்கப் பெருமாள் வீதியில் கருட ஸேவை ஏசல். பெரும் திரளாக பக்தர்கள் கூட்டம் வீதி முழுக்க குழுமியிருந்தனர். அன்றைய காலை அருளிச் செயல் கோஷ்டியில் மூன்றாம் திருவந்தாதி ஸேவிக்கப் பெற்றது.
மூன்றாம் நாள் மாலை ஹம்ச வாஹனத்தில் புறப்பாடு. அன்று திருப்பாவை, நாச்சியார் திருமொழி தொடக்கம்.
நான்காம் நாள் காலை சூர்யப் பிரபையில் புறப்பாடு. காலை நான்முகன் திருவந்தாதி அருளிச் செயல் கோஷ்டி.
மாலை சந்திரப் ப்ரபையில் புறப்பாடு கண்டருளினார். அருளிச் செயலில் நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி.
ஐந்தாம் நாள் காலை ஸ்ரீ.தெள்ளீயஸிங்கர், நாச்சியார் திருக்கோலத்தில், பல்லக்கில் வீதி புறப்பாடு. திருவிருத்தம் அருளிச் செயல் கோஷ்டி.
அன்று மாலை திருக்கோவிலுக்குள் பெருமாளுக்கு, மூலவராகிய யோகா நரசிம்மர் திருக்கோலம். இத் திருக்கோலத்தை தரிசிக்க ஆயிரக் கணக்கில் பக்தர்கள் கூடியிருந்தனர். பத்தி உலாத்தல், ஊஞ்சல் ஸேவை முடிந்து அத் திருக்கோலத்துடனே, வாஹன மண்டபம் எழுந்தருளல்.
இரவு ஹனுமந்த வாஹனம். திருச்சந்த விருத்தம் கோஷ்டி.
ஆறாம் நாள் காலை ஐந்து மணிக்கு திருக்கோவிலுக்குள் பெருமாளுக்கு சூர்ணாபிஷேகம். மிக அருமையான பெருமாள் அமுது செய்வித்த சர்க்கரைப் பொங்கல் அடியார்களுக்கு வினியோகம். பிறகு பெருமாள் தங்க சப்பரத்தில் வீதி புறப்பாடு. அன்றைய அருளிச் செயல் கோஷ்டி திருச்சந்தவிருத்தம். அன்று வீதி புறப்பாடு முடிந்து, பெருமாள் வாஹன மண்டபம் எழுந்தருளிய பின், ஏகாந்த ஸேவையில் திருக்கோயிலுக்குள் எழுந்தருளினார். இந்த ஒரு ஸேவையும் மிக அற்புதமான ஒரு ஸேவையாகும். பெருமாள் ஒரே ஒரு மாலை மட்டும் சாற்றிக் கொண்டு உபயநாச்சிமார்களுடன் எழுந்தருளும் காட்சி மிக அருமை. என்றும் இந்த ஸேவையை மனக்கண்ணால் ஸேவித்துக் கொண்டே இருக்கலாம்.
ஆறாம் நாள் இரவு யானை வாஹனத்தில் புறப்பாடு. இத்திருத்தலத்து யானை வாஹனம் மிக அற்புதமாக இருக்கும். அதில் பெருமாளை ஸேவிப்பதென்பதும் மற்றொரு பாக்கியமே. இரவு துளசிங்கப் பெருமாள் வீதியில் ஏசல். இரவு நேரம் ஆகையால் சற்று நின்று கொண்டு ஏசலை ஸேவிப்பதற்கு முடியாத அளவிற்கு பெரும்திரள் பக்தர்கள் – ஸ்ரீவைஷ்ணவர்களும், அடியார்களும் அவர்தம் குடும்பத்தினரும், குழந்தைகளுமாக வீதி எங்கும் நிறைந்திருந்தனர். அன்றைய அருளிச் செயல் கோஷ்டி திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான், கண்ணினுன் சிறுத்தாம்பு.
ஏழாம் நாள் காலை ஸ்ரீ.தெள்ளியஸிங்கர் திருத்தேரில் வீதி புறப்பாடு. தேர் வடம் பிடிப்பதற்கு முன் திருவெழுக்கூற்றிருக்கை மற்றும் பெரிய திருமொழி தொடங்கி, பின் வீதியில் முதல் பத்து முடிந்து , தேர் நிலைக்கு வரும் பொழுது, இரண்டாம் பத்தின் மூன்றாம் திருமொழியான இத்திருத்தலப் பாசுரமான “ விற்பெரு விழவும் “ பாசுரத்துடன் நிறைவுபெற்றது,
ஏழாம் நாள் இரவு வீதி புறப்பாடு கிடையாது. பெருமாளுக்கு மண்டபத் திருமஞ்சனம் நடந்தேறியது.
எட்டாம் நாள் காலை நரசிம்மனாகிய , ஸ்ரீ.தெள்ளியஸிங்கர், லக்ஷ்மி நரசிம்மன் திருக்கோலத்தில் மிக அழகாக பக்தர்களுக்கு பல்லக்கில் ஸேவை ஸாதித்தருளினார். அன்று காலை சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமொழி அருளிச் செயல் கோஷ்டி.
எட்டாம் நாள் இரவு குதிரை வாஹனத்தில் புறப்பாடு கண்டருளினார். இரவு தேரடி வீதியில் ஏசல். இங்கும் பெருமாளின் ஏசலைக் காண பெரும் திரளான பக்தர்கள் கூட்டம். ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் எழுந்தருளி வேடர் பரி நடைபெற்றது.
ஒன்பதாம் நாள் காலை ஸ்ரீ.தெள்ளியஸிங்கர், ஆளும் பல்லக்கில் வீதி புறப்பாடு கண்டருளி, சிங்கராச்சாரி வீதி, தேரடி வீதி சந்திப்பில் போர்வை களைதல் நடைபெற்றது. திருக்கோயிலிலிருந்து எழுந்தருளும் போது, பல விதமான போர்வைகள் சாற்றப்பட்டிருப்பார். பின் மேற் சொன்ன இடத்தில் ஒவ்வொரு போர்வையாக களையப் பெற்று பெருமாள், பக்தர்களுக்கு ஸேவை ஸாதிப்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். பெரிய திருமடல் மற்றும் பெரிய திருமொழி அருளிச் செயல் கோஷ்டி.
பின் பெருமாள் வாஹன மண்டபம் எழுந்தருளி, அங்கிருந்து தோளுக்கினியானில் புறப்பாடு கண்டருளி, அவர் ஸன்னதி கோபுர வாசலில் மட்டையடி உற்சவம் நடைபெற்றது. திருவரங்கத்திலே பங்குனி உத்தரத்தன்று, ஸ்ரீ.நம்மாழ்வார் எழுந்தருளி, தாயாரிடம், பெருமாளுக்கு ஆதரவாக பேசுவது போல் இங்கும் எழுந்தருளினார்.
அன்று பகல் சுமார் 12.00 மணியளவில் குளத்தங்கரை வீதியில் தீர்த்தவாரி.
ஒன்பதாம் நாள் மாலை 5.30 மணியளவில் பெருமாள் திருக்கோயிலிருந்து எழுந்தருளி, புண்ணியகோடி விமானத்திற்கு எழுந்தருளினார். பெருமாள் வீதி புறப்பாடு கண்டருள சில விநாடிகளே இருந்த நேரத்தில் , பெருமாள் பெரிய வீதி கண்டருள இயலாத படி ஒரு அஸந்தர்ப்பம் துளசிங்கப் பெருமாள் வீதியில் நடைபெற்றது. அதன் காரணமாக பெருமாள் குளத்தங்கரை வீதிகளிலும், தெற்கு மாட வீதியிலும் புறப்பாடு கண்டருளி திருக்கோயிலுக்கு எழுந்தருளினார். வீதியிலும், திருக்கோயிலுக்குள்ளும் பெரிய திருமொழியின் மீதமுள்ள பாசுரங்களும், திருக்குருந்தாண்டகம், திருநெடுந்தாண்டகமும் அருளிச் செய்யப்பட்டது.
இரவு ஒன்பது மணியளவில் த்வாஜ அவரோஹணம் நடைபெற்று, பெரிய திருமொழியின் பதினோறாம் பத்தின் எட்டாம் திருமொழியான “ மாற்றமுள, ஆகிலும் சொல்லுவன் “ பாசுரம் தொடங்கி பத்து பாசுரங்களும், திருநெடுந்தாண்டகத்தின் கடைசி இரு பாசுரங்களும் சாற்றுமுறை பாசுரங்களாக ஸேவிக்கப் பெற்று, இத்துடன் முதல் மூவாயிரம் பாசுரங்கள் ஸேவிக்கப் பெற்று நிறைவு பெற்றது.
பத்தாம் நாளான கடைசி நாளான இன்றைய ( 05.07.15 ) தினம் பற்றி விவரிப்பதற்கு வார்த்தைகள் போதாது. இவ் உற்சவத்தினை நேரில் ஸேவிக்கும் பாக்கியம் அடியார்கள் அனைவரும் அடுத்த முறையாவது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அடியேனுக்கு உள்ள சிற்றறிவினைக் கொண்டு ஓரளவிற்கேனும் விவரிக்க முயல்கிறேன்.
காலை 9.30 மணியளவில் திருமஞ்சனம். இத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள எல்லா எம்பெருமான்களும், ஆழ்வார், ஆச்சாரியர்களும் ஒரு சேர மண்டபத்தில் எழுந்தருளியிருந்தனர். நடுநாயகமாக ஸ்ரீ.தெள்ளியஸிங்கர், அவருக்கு இடப்புறத்தில் ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி, வலப் புறத்தில் ஸ்ரீ.ரங்கனாதர், ஸ்ரீ.வேதவல்லித் தாயார், வலப் புறத்தின் மற்றொரு பக்கம் ஸ்ரீ.ராமர், இடப்புறத்தில் மற்றொரு பக்கம் ஸ்ரீ.வரதர். நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், ஸ்வாமி.எம்பெருமானார், ஸ்வாமி. மணவாள மாமுனிகள், மற்றும் எல்லா ஆழவார்கள் , ஆச்சாரியர்கள் மூன்று பக்கமும் சுற்றி எழுந்தருளியிருந்தனர். இவ்வாறு எல்லா எம்பெருமான் கலு, ஆழ்வார் , ஆச்சாரியர்கள் எழுந்தருளுவதை இத் திருக்கோயிலில் இரண்டு முறை ஸேவிக்க முடியும். ஒரு சமயம் ஸ்ரீ.பார்தசாரதி ஸ்வாமி ப்ரம்மோற்சவத்தின் த்வாதச ஆராதனத்தின் போதும், மற்றோரு முறை ஸ்ரீ.தெள்ளீயஸிங்கர் ப்ரம்மோற்சவத்தின் த்வாதச ஆராதனத்தின் போதும். இவ்வாறான ஒரு சிறப்பு ஸேவை அடியேனின் சிற்ற்றிவுக்கு எட்டிய வரையில் வேறு எந்த திருக்கோயிலிலும் கிடைக்கப் பெறாது என்றே எண்ணுகிறேன்.
எல்லா எம்பெருமான்களுக்கும் திருமஞ்சனம் ஒரு சேர நடைபெற்றது. பிறகு த்வாதச ஆராதனம். சுமார். ஒரு மணியளவில் திருவாய்மொழி அருளிச் செயல் கோஷ்டி தொடங்கி, ஒரு சேர மாலை 5.30 மணியளவில் 1102 பாசுரங்களும் ஸேவிக்கப் பெற்று, திருவாய்மொழியும் நிறைவு பெற்றது. பின் சாற்றுமுறையாகி, தீர்த்த பிரசாத வினியோகம் நிறைவு பெற இரவு 8.00 மணிக்கு மேல் ஆகிவிட்டது. பிறகு எல்லா எம்பெருமான்களும் ஆழ்வார் , ஆச்சாரியர்களும் தம், தம் ஆஸ்தானம் திரும்பிய பிறகு. இரவு 10.30 மணியளவில் சிறிய தேரில், ஸ்ரீ.தெள்ளியஸிங்கர் புறப்பாடு கண்டருளினார். வீதியில் இராமாநுச நூற்றந்தாதி அருளிச் செயல் கோஷ்டி.
இவ்வாறாக கடந்த பத்து நாள்களாக பெரும் அளவில் மிகச் சிறபாக நடைபெற்ற இந்த உற்சவம் முடிந்து விட்டதே என்ற கவலை அடியோங்கள் பலரின் மனத்தினுள்ளும் நிச்சயம் இருக்கும் என்றே எண்ணுகிறேன்.
வரும் தை மாதம் ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி ப்ரம்மோற்சவம் ( இந்த ஆண்டு பெருமாள் , பாலாலயத்தில் எழுந்தருளியிருந்த காரணத்தினால், சம்ப்ரோக்ஷணம் முடிந்தும் ) வரும் வரை காத்திருக்க வேண்டும்.
இடையில் பல சிறப்பான உற்சவங்கள் நடைபெரும் என்றாலும், ப்ரம்மோற்சவத்தினை காணும் பாக்கியம் தை மாதத்தில் தான் கிடைக்கப் பெறுவோம்.