அனைத்து மாநில தலைநகரங்களிலும் திருவள்ளுவர் சிலை. உ.பி. மாநில எம்.பி கோரிக்கை

அனைத்து மாநில தலைநகரங்களிலும் திருவள்ளுவர் சிலை. உ.பி. மாநில எம்.பி கோரிக்கை
statue
கன்னியாகுமரியில் 133 அடியில் கம்பீரமாக திருவள்ளுவர் சிலை வீற்றிருக்கின்றது. இந்த சிலையை காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்று உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி தருண் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாமக்கல்லில் சிலை தயாரிக்கப்பட்டு, ஹரித்துவாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை விரைவில் ஹரித்துவார் கங்கை நதிக் கரையில் அமைக்கப்படவுள்ளது. இந்த சிலை ரூ.20 லட்ம் செலவில் 12 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ளது.

ஹரித்துவாரில் வள்ளுவர் சிலை அமைப்பது குறித்த விழிப்புணர்வுப் பேரணி, உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தருண் விஜய் எம்.பி. தலைமையில் கடந்த 18-ல் கன்னியாகுமரியில் தொடங்கியது. வள்ளுவர் மாதிரி சிலையுடன் கூடிய இப்பேரணி வாகனம் கரூருக்கு நேற்று வந்தது. இந்த வாகனத்துக்கு, கரூர் அரசுக் கலைக் கல்லூரி முன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், விழிப்புணர்வுப் பேரணி வாகனம் சுங்கவாயில், லைட்ஹவுஸ், பேருந்து நிலையம், கோவை சாலை வழியாக கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

முன்னதாக, பேரணி வாகனத்தில் வந்த தருண் விஜய் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பில் இதுவரை 2 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். திருக்குறள் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தக்கூடிய ஒரு சக்தி. இந்தியாவின் பெருமைக்குரிய அடையாளம் திருக்குறள். எனவே, திருக்குறள் பெருமையை உலகத்துக்கு எடுத்துக்காட்டுவதற்காக ஹரித்துவாரில் உள்ள கங்கை நதிக்கரையில் வள்ளுவர் சிலை வைக்கப்பட உள்ளது.

நாட்டின் ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் வள்ளுவர் சிலை வைக்கவேண்டும். வள்ளுவர் சிலை விழிப்புணர்வுப் பேரணி வரும் 22-ம் தேதி சென்னையை சென்றடையும். அன்று, கவர்னர் தலைமையில் கடற்கரையில் விழா நடைபெற உள்ளது. பேரணி, 29-ம் தேதி ஹரித்துவார் சென்ற பின்னர், அங்கு சிலை நிறுவப்படும்’ என்று கூறினார்.

Leave a Reply