திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று நடந்த கருடசேவையில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம், கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பல்வேறு வாகனங்களில், பூதேவி, ஸ்ரீதேவியுடன் உற்சவர் வீரராகவர் எழுந்தருளி வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை நேற்று நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு கோபுர தரிசனத்தை தொடர்ந்து, கோவில் மண்டபத்தில் உற்சவர் வீரராகவர் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர். பின் காலை, 5:30 மணிக்கு, கருட சேவை புறப்பாடு துவங்கியது. இரவு, 8:30 மணிக்கு, ஹனுமந்த வாகன உற்சவம் நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு சேஷ வாகனம், இரவு, 7:30 மணிக்கு சந்திர பிரபை நடக்கிறது. வரும், 30ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.