திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கார்த்திகை பரணி தீபம் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்றப்பட்டது. தீபம் காண பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர். அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணதிர ஒலித்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கார்த்திதை தீப திருவிழாவில் இன்று காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 2ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை மீது மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை காண திருவண்ணாமலையில் 15 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இதனை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
ஏகன் அனேகன் என்பதை விளக்கும் வகையில் அண்ணாமலையார் மூல கருவறையில் கற்பூர தீபமேற்றி, மகாதேவ குருக்கள், கீர்த்திவாசன், முத்துகுமாரசுவாமி, வெங்கட்ராஜூ சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, வேதமந்திரங்கள் முழங்க அந்த கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய் திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டு பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் அண்ணாமலையார் மூல கருவறையில் எதிரில் ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு அதிகாலை 4மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபத்தை முத்துகுமாரசுவாமி குருக்கள் கையிலேந்தியவாறு ஸ்வாமி சன்னதியில் முதல் பிரகாரத்தில் வலம் வர அப்போது பக்தர்கள் பரவசத்துடன் அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷம் எழுப்பி வழிபட்டனர். பிறகு இந்த சிவ மூர்த்தங்களிலிருந்து விரிவானதே எல்லா மூர்த்திகளும் என்பதனை காட்டுவதற்காக, பின்னர் அம்மன் கோயில் கருவறையில் ஐந்து அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. மேலும் கோயிலில் உள்ள விநாயகர் சந் நதி உள்ளிட்ட அனைத்து சந்நதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டன.
பின்னர் மாலை 6 மணிக்கு அனேகன் ஏகன் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் மஹாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வாணை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர். அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமருவர். அப்போது சரியாக 5.59 மணி அளவில் அர்த்தநாரிஸ்வரர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி நடனமாடி காட்சியளிக்கும் வைபோகம் நடைபெறும். அப்போது காலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் உடன் கொண்டு வரப்பட்டு அவை கொடி மரத்தின் முன்பாக உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்க்கப்படும். பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தகள் ஏற்றப்பட்டு அவைகளை கொண்டு 2ஆயிரத்து 668 அடி மலை உயரத்தில் உள்ளவர்களுக்கு தெரியும் படி காண்பிக்கப்படும். அப்போது மலை மீது மஹா தீபம் ஏற்றப்படும்.அர்த்தநாரிஸ்வரர் ஆண்டில் ஒரு முறை மஹாதீபத்தன்று மட்டுமே கோயில் கொடி மரம் அருகே பலி பீடத்தின் அருகே வந்து காட்சி தந்துவிட்டு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திகை மகாதீபத்தை காண, ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர். இதற்கென சென்னை, புதுச்சேரி, விழுப்புரம் பகுதியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆளில்லா குட்டி விமானம்:
தீபத்திருநாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வடக்கு மண்டல ஐ.ஜி., தலைமையில், 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகரின் முக்கிய பகுதிகளில், 76 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த ஆண்டு ஆளில்லா குட்டி விமானம் மூலம் போக்குவரத்து நெரிசலையும், குற்றங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 33 கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் கண்காணிக்கப்படுவர்.