திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், மஹா கும்பாபிஷேக திருப்பணி, இரண்டாம் கட்ட பாலாலய பூஜை, 15 சன்னதிகளில், நேற்று நடந்தது. நினைக்க முக்தி தரும் தலமாகவும், பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், 2002 ஜூன், 27ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
அதையடுத்து, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மஹா கும்பாபிஷேக விழாவினை, அண்ணாமலையார் கோவிலில் மீண்டும் நடத்திட, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, 27 கோடி ரூபாயில், திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.இதற்காக கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்கள் மற்றும் கோவிலில் உள்ள சன்னதிகளை புதுப்பிக்கப்படுகின்றன.
முதற்கட்டமாக கடந்த ஜனவரி, 26ம் தேதி, 9 கோபுரங்களுக்கும், பாலாலய பூஜை நடத்தி, அதன் சக்தியை முழுவதும் அத்திமர பலகையில் ஆவாஹணம் செய்து, அதனை பாதுகாப்பாக வைத்து, தினசரி பூஜை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், இரண்டாம் கட்டமாக நேற்று, ராஜகோபுர விநாயகர், கோபுரத்திளையனார் சன்னதி, கம்பத்து இளையனார் சன்னதி, சிவகங்கை தீர்த்த விநாயகர், பெரியநந்தி, கல்யாணசுந்தரேஸ்வரர், வன்னிமர விநாயகர், காலபைரவர், சின்னநந்தி, ஆணைதிறை கொண்ட விநாயகர், பிச்சை இளையனார், பிரம்மலிங்கம், வினைதீர்க்கும் விநாயகர், வித்யாஈஸ்வரர், ஆலமர விநாயகர், உள்ளிட்ட, 15 சன்னதிகளுக்கான பாலாலயம் நடந்தது.இதில், கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்கி, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.