திருவேதிக்குடி ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் சிறப்புகள்.

‘காலாகாலத்தில் என் பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தை நடத்திப் பார்த்தால்தான் நிம்மதி!’ என்று சொல்லாத தாய்- தகப்பனே இல்லை எனலாம். ‘என் பேரன் திருமணத்தைக் கண்குளிரப் பார்த்துட்டுத்தான் கண்ணை மூடணும்!’ என தாத்தாக்களும் பாட்டிமார்களும் பிரார்த்திப்பது உண்டு. திருமணம் என்பது அத்தனை உயர்வான விஷயம்! ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அனுசரித்து, இணையாகவும் துணையாகவும் இருந்து, வாழ்க்கைப் பயணத்தை நடத்திச் செல்லவேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட நியதி அது.

இல்லற தர்மம் எனச் சிறப்பித்துச் சொல்லப்படும் திருமணம், மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான, அருமையான நிகழ்வு என்பதை நம் எல்லோராலும் மிக எளிதாக உணரமுடியும்தானே!

தாய்க்குத் தாயாகவும் தந்தைக்குத் தந்தையாகவும் குருவுக்கு குருவாகவும் இருந்து உலகத்தைக் காத்தருளும் சிவனார், தன்னுடனேயே இருக்கும் நந்திதேவருக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்க ஆசைப்பட்டதில் வியப்பு என்ன இருக்கிறது?!

திருவையாறில் கோலோச்சுகிற ஸ்ரீஐயாரப்பர், நந்தியெம் பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் திருமணம் நடத்தி வைக்கத் திருவுளம் கொண்டார். பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திர நாளில், திருமழபாடி எனும் திருத்தலத்தில் திருமணத்தை நடத்துவது என முடிவு செய்தார்.

திருமண வைபவத்துக்காக, சுற்றியுள்ள ஏழு ஊர்களில் இருந்து பொருட்களைச் சேகரித்தார் இறைவன். கல்யாணத்துக்குத் தேவையான பழங்களை ஓர் ஊரில் இருந்து பெற்றார். அந்த ஊர், திருப்பழனம் என்றானது. விருந்துக்குத் தேவையான பொருட்களைத் தந்த ஊர், திருச்சோற்றுத்துறை என அழைக்கப்பட்டது. கண்டாபரணங்கள் முதலான அணிகலன்களைத் தந்ததால் அந்த ஊருக்குத் திருக்கண்டியூர் எனப் பெயர் அமைந்தது. பூக்களையும் மலர்மாலைகளையும் வழங்கிய ஊர் திருப்பூந்துருத்தி எனப் போற்றப்பட்டது. கல்யாண ஹோமத்துக்குத் தேவையான நெய்யை வழங்கிய ஊர் திருநெய்த்தானம் என்றானது.

எல்லாவற்றுக்கும் மேலாக, திருமணச் சடங்குகளைக் குறைவற நடத்துவதற்கு, வேதம் அறிந்த அந்தணர்கள் வேண்டுமே! அதற்காக வேதியர் கூட்டம் ஒன்று திரண்டு வந்தது. அவர்களின் ஊர், பின்னாளில் திருவேதிக்குடி என அழைக்கப்பட்டது.

நந்திதேவரின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக, திருவேதிக் குடியில் இருந்து வேதியர்கள் கிளம்பி திருமழபாடிக்குச் சென் றார்கள். முதல் நாளில் இருந்தே ஹோமங்களையும் யாகங்களையும் செவ்வனே செய்தார்கள். மாங்கல்ய தாரணம் எனும் தாலி கட்டும் வைபவத்தைக் கோலாகலமாகச் செய்தார்கள். ஹோமத்தில் நிறைவு அடைந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் திருமணத்துக்கு வந்து, ஸ்ரீநந்தியெம்பெருமானையும் அவரின் மனைவி சுயசாம்பிகை யையும் ஆசிர்வதித்தனர்.

இதில் மகிழ்ந்த ஸ்ரீஐயாறப்பர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும்விதமாக, புதுமணத் தம்பதியான நந்தியெம்பெருமானையும் சுயசாம்பிகையையும் சித்திரை மாதத்தில் திருவையாறில் இருந்து திருவேதிக்குடிக்கு அழைத்து வந்து, ஸ்ரீஅறம் வளர்த்த நாயகியுடன் திருக்காட்சி தந்தார்.

அதுபோலவே, நந்தியெம் பெருமானின் திருமணம் சிறப்பாக நடைபெற உதவிய, இதர ஆறு தலங்களுக்கும் வந்து தரிசனம் தந்தார் சிவனார். இவை சப்த ஸ்தான ஸ்தலங்கள் என்று போற்றப்படுகின்றன.

திருவேதிக்குடிக்கு வந்தால், திருமண யோகம் கைகூடும் என்றும், இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொண்டால், கல்வியும் ஞானமும் கிடைக்கப் பெறலாம் என்றும் நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

தஞ்சாவூரில் இருந்து அரியலூர் செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்டியூர். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருவேதிக்குடி. இங்கே ஆலயத்தில் உறைந்திருக்கும் இறைவனின் திருநாமம்- ஸ்ரீவேதபுரீஸ்வரர்; அம்பாள்- ஸ்ரீமங்கையர்க்கரசி. திருவேதிக்குடி ஸ்ரீமகாதேவர் என்றும், சதுர்வேதமங்கலத்து மகாதேவர் என்றும் இங்கே உள்ள இறைவனைக் குறித்துக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. வாழை மடுவில் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால், வாழை மடுநாதர் எனும் திருநாமமும் இறைவனுக்கு உண்டு.

மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம், சயனதோஷம், சுக்கிர தோஷம், நாக தோஷம், குரு பலமின்மை என எத்தனை தோஷங்கள் இருந்தாலும் சரி, ‘வரன் அமைய வில்லையே’ எனக் கலங்குவோர் திருவேதிக்குடிக்கு வந்து ஸ்ரீமங்கையர்க்கரசியையும் ஸ்ரீவேதபுரீஸ்வரரையும் வழிபட்டால், மாங்கல்ய வரம் நிச்சயம்.

சோழ மன்னன் ஒருவனின் மகளுக்குத் திருமணம் தள்ளிக் கொண்டே போனது. அவன் தனது பட்டத்தரசியுடன் வந்து, அம்பாளையும் சிவனாரையும் தரிசித்து வழிபட… மகளின் திருமணம் இனிதே நடந்தது. அதையடுத்து, இந்தக் கோயில் திருப்பணிகளுக்காக அவன் ஏராளமான பொருளுதவிகள் செய்தான் என்கிறது ஸ்தல வரலாறு.

உன்னியிரு போதும் அடி பேணும் அடி
யார்தமிடர் ஒல்க அருளித்
துன்னியரு நால்வருடன் ஆல்நிழலில்
இருந்ததுணை வன்றனி டமாம்
கன்னியரொடு ஆடவர்கள் மாமணம்
விரும்பியரு மங்கலமிக
மின்னியலும் நுண்ணிடை நன்மங்கையர்
இயற்றுபதி வேதிகுடியே!

– என இத்தலம் குறித்து சம்பந்தர் அருளிய பதிகத்தை 48 நாட்கள் தொடர்ந்து பாடி, சிவ வழிபாடு செய்து வந்தால், விரைவில் கல்யாண யோகம் கைகூடி வரும் என்கின்றனர் பக்தர்கள்.

கணவன் மனைவிக்கு இடையில் பிணக்கு ஏற்பட்டு, சிக்கலும் சண்டையுமாகவே வாழ்க்கை இருந்தாலோ, அல்லது பிரிந்துவிட்டாலோ… இங்கு வந்து இந்தப் பதிகம் பாடிப் பிரார்த்தித்தால், விரைவில் அவர்கள் ஒன்றுசேருவார்கள், கருத்தொருமித்து வாழ்வார்கள் என்பது ஐதீகம்!

நவக்கிரகங்களின் தலைவனான சூரிய பகவான் வழிபட்ட தலம் இது. நந்திகேஸ்வரர், மார்க்கண்டேயர் ஆகியோர் வழிபட்டு வரம் பெற்ற தலமும்கூட! அதுமட்டுமா? குபேரன் இங்கு தவமிருந்து சிவ வழிபாடு செய்து, சிவனருளைப் பெற்றார் என்கிறது ஸ்தல புராணம்.

ஆனால், இத்தனை பெருமைகளோடு ஒரு காலத்தில் பிரமாண்டமாக இருந்த இந்த ஆலயம் இன்றைக்குச் சிதைந்து போய், பிராகாரங்களே இல்லாமல், சந்நிதிகள் எல்லாம் சரிந்து விழும்படி உள்ளன என்பதுதான் மிகக் கொடுமை. புராண காலத்தில் தேவர் களாலேயே கொண்டாடப்பட்ட தலம், முப்பத்து முக்கோடி தேவர்களும் தங்கள் மனைவியருடன் வந்து சிவனாரை வழிபட்ட தலம் எனப் பல சிறப்புகளைக் கொண்ட இந்தக் கோயிலில், கும்பாபிஷேகம் நடந்து 100 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

வேதங்களுக்குப் பெயர் பெற்ற ஆலயத்தில் வேதகோஷங்கள் முழங்க வேண்டாமா? கல்யாணக் கவலையுடன் இருக்கும் பெற்றோரும் பெண்களும் இங்கு வந்து வழிபட்டுப் பலன் பெறும் வகையில், பிராகாரங்களும் சந்நிதிகளும் பொலிவு பெறுவது நம் கையில்தானே இருக்கிறது!

கல்யாண வரம் தரும் ஆலயத் திருப்பணிக்குக் கைகொடுப்போம். ஸ்ரீமங்கையர்க்கரசி அம்பாள் கோலோச்சுகிற கோயிலில், விழாக்களும் பூஜைகளும் குறைவற நடைபெற, நம்மால் இயன்றதைச் செய்வோம்.

ஞானமும் யோகமும் தரும் ஸ்ரீவேதபுரீஸ்வரர், நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.

எங்கே இருக்கிறது?

தஞ்சாவூரில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில், சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்டியூர். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருவேதிக்குடி. கண்டியூரில் இருந்து மினி பஸ் மற்றும் ஆட்டோ வசதி உண்டு.

 

Leave a Reply