திருவொற்றியூர் வடிவுடை அம்மன் தலம்

திருவொற்றியூர் வடிவுடை அம்மன் தலம் மிகவும் விசேஷமானது. இந்த அம்மனை சென்னை மாநகரத்தினுடைய ஈசானியக்காளி என்று சொல்லலாம். அந்தக் காலத்தில் சோழர்கள் ஒவ்வொரு திக்கிலும் காளியை வைத்து வழிபடுவார்கள். சோழ சாம்பிராஜ்ஜியத்தினுடைய ஒரு திசையில் இருக்கக்கூடிய காளிதான் திருவக்கரை வக்கிரக்காளி. திண்டிவனம் பக்கத்தில் இருக்கிறது. அதோடு சோழ சாம்பிராஜ்ஜியம் முடிந்தது. அதன்பிறகு, அவர்கள் பல்லவ சாம்பிராஜ்ஜியத்தைப் பிடிப்பதற்காக அந்தக் காளியை அங்கு பிரதிஷ்டை செய்தார்கள். அதன்பிறகுதான் போர் தொடுத்தார்கள். அதன்பிறகுதான் சோழர்களுக்கு முழு வெற்றியும் கிடைத்தது.

அந்தக் காலத்தில் மன்னர்கள் அஷ்ட திக்குகளிலும் கோயில்களை எழுப்புவார்கள். அதில் வன தெய்வங்களுக்கு அவர்கள் முக்கியத்தும் தருவார்கள். அந்தக் காளியினுடைய பார்வை, பாவிக்கிறார்களே அதனை கொஞ்சம் குறுக்காக எதிரியின் எல்லையை நோக்கியது போல் வைப்பார்கள். நேரடியாக வட திசையையோ, கிழக்கு திசையையோ நோக்கி முகத்தை வைக்காமல், கொஞ்சம் கோணத்தை மாற்றி வைப்பார்கள். அதுபோன்று இருக்கும் அம்மனுக்கு சம்கார குணம் அதிகமாக இருக்கும். அதுபோன்ற சம்கார குணம் மற்றும் சாத்வீக குணம் இரண்டும் அமைந்ததுதான் திருவொற்றியூர் வடிவடை அம்மன். அதைச் சுற்றிலும் பட்டிணத்தடிகளார் ஜீவ சமாதி எல்லாம் அமைந்திருக்கிறது.

சென்னை மாநகரை காக்கக்கூடிய அம்மன்களில் வடிவுடை அம்மனும் உண்டு. இந்த வடிவுடை அம்மன் மிக மிக சக்தி வாய்ந்தது. குழந்தைப் பேறு ம‌ற்று‌ம் வேறு எந்த விஷயமாக இருந்தாலும் அங்கு சென்று பிரார்த்தனை செய்யலாம். குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் மிகவும் விசேஷமாக இருக்கும். நெய் தீபம் ஏற்றி வழிபட்டாலும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு நகரம், ஒவ்வொரு ஊருக்கும் எல்லைத் தெய்வம் உண்டு. அதுபோல, சென்னை நகரத்தினுடைய ஈசானி எல்லை, அதாவது வடகிழக்குப் பகுதி எல்லைத் தெய்வமாக திருவொற்றியூர் வடிவுடை அம்மன் இருக்கிறார்.

திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது, அங்கு ஈசானி லிங்கம் என்று ஒன்று உண்டு. அதுபோன்றுதான் ஈசானிய அம்மன், ஈசானிய காளி. இந்த ஈசானிய அம்மனை வழிபட்டால் எல்லா சக்தியும் கிடைக்கும்.

Leave a Reply