திருவாடானை ஸ்தல வரலாறு..

[carousel ids=”81300,81301,81299,81298,81297,81296″]

இத்தலம் நான்கு யுகங்களிலும் இருப்பதாகவும், தேவலோகத்தில் உள்ள அமிர்தத்திலிருந்து ஒரு துளி பூமியில் விழுந்ததால் இவ்வூர் உண்டாகியது எனவும் திருவாடானை தலபுராணம் கூறுகிறது. இத்தலத்து இறைவனை வணங்குவோருக்கு முக்தி அளிப்பதால் முக்திபுரம் எனவும், சூரியன் வணங்கியதால் ஆதிரத்தினேசுவரம் எனவும், வாருணி சாபம் நீக்கியதால் ஆடானை எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

வருணனின் மகன் வாருணி ஒருமுறை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரை மதிக்காமல் சென்றதால் கோபமுற்ற முனிவர், வாருணி ஆட்டுத்தலையும் யானை உடலும் பெறுமாறு சாபமிட்டார். வாருணியும் அவ்வாறே ஆக, தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்க, சூரியனால் வழிபடப்பட்ட இத்தலத்து மூர்த்தியான சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டால் சாபம் நீங்கும் என்று கூறினார்.

வாருணியும் இத்தலம் வந்து சூரிய தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து இறைவனை வணங்கி சுயரூபம் பெற்றான். வாருணி சாபம் நீக்கியதால் இத்தலம் ஆடானை என்று பெயர் பெற்றது. ஆகையால் இத்தலத்து இறைவன் ஆடானை நாதர் என்று பெயர் பெற்றார்.

பிரம்மதேவர் கூறியபடி ஒருமுறை சூரியன் இத்தலத்திற்கு வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி ரத்தினமயமான லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். ஆதியாகிய சூரியன் நீல நிறமுள்ள ரத்தினமயமான இறைவனை வழிபட்டதால் இத்தலத்து இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் பெயர் பெற்றார். இன்றும் உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் செய்யும் போது இறைவன் நீல நிறமாக காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது.

சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவில் 130 அடி உயரம் உள்ள 9 நிலைகளை உடைய அழகிய சுதைச் சிற்பங்களோடு கூடிய ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. நீண்ட மதில் சுவர்களும், பெரிய வெளிப் பிரகாரமும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களை உடைய மண்டபமும் உடைய இக்கோவில் பாண்டிய நாட்டு தேவார சிவஸ்தலங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மாசி மாதத்தில் சூரியஒளி மூலவர் மற்றும் அம்பாள் மீது விழும்படி கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
உள் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், 63 நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, வருணலிங்கம், விஷ்வநாதர், சண்டிகேஸ்வரர், நடராஜர், நால்வர், பைரவர், சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன. சுக்கிர தோஷ நிவர்த்தித் தலமாக விளங்குவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

வெள்ளிக்கிழமை தோறும் இத்தலத்தில் சுக்கிர தோஷ நிவர்த்திக்காக விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தின் தீர்த்தங்கள் க்ஷீரகுண்டம், வருணதீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம் ஆகியவை.
இத்தல முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு இரு தேவியர் உடனிருக்க மயிலுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இவர் சுமார் 5 அடி உயரத்துடன் கம்பீரமாக உள்ளார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. நீங்களும் ஒரு தடவை பார்த்து வாருங்கள்..

*தொண்டி, காளையார்கோவில், தேவகோட்டை, காரைக்குடி மற்றும் இராமநாதபுரத்திலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது…

Leave a Reply