மனிதர்களுக்கு ஆதார் அட்டை கொடுக்கவே அரசு படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவர் தான் வளர்க்கும் நாய்க்கு ஆதார் அட்டை பெறுவதற்காக ஆவணங்கள் தயாரித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் என்ர மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது ஆசாம் கான் என்பவர் உம்ரி என்ற நகரத்தின் ஆதார் அட்டை சேர்க்கை மையத்தின் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தான் ஆசை ஆசையாக வளர்க்கும் நாய்க்கு போலியான ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டை தயாரித்து வைத்திருந்ததை சமீபத்தில் கண்டுபிடித்த போலீஸார் அவரை கைது செய்து அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உம்ரி நகர பகுதி மக்கள் சிலர் தங்களுக்கு ஆதார் அட்டை இன்னும் கிடைக்காத நிலையில் அந்த அதிகாரி தான் வளர்க்கும் நாய்க்கு ஆதார் அட்டை வைத்திருப்பதாக கொடுத்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுத்த போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். .
நாயின் ஆதார் அட்டையில், நாயின் பெயர் ‘டாமி சிங் என்றும் பிறந்த தேதி: 26/11/2009 என்றும் பாலினம்: ஆண்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாய்க்கு ஆதார் அட்டை பெற்றிருப்பது போல, இன்னும் வேறு எந்த விலங்குகளுக்கு ஆதார் அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.